பக்கம் எண் :

எக்கோவின் காதல்139

கண்முன் தெரிந்தது. நானும் அவள் அருகில் இருந்தேன். மறுபடி அவளருகில் உலகநாதன், மேள ஒலி வீட்டையே அதிரச் செய்தது. அவள் அவனைக் கடைக்கண்ணால் பார்க்கிறாள். அவன் முறுவல் பூத்த முகத்தை அவள் பக்கமாகத் திருப்புகிறான்.

'அய்யா! தபால்'

திடுக்கிட்டு எழுந்தேன். கற்பனை கலைந்தது. தபாலை வாங்கிப் பார்த்தேன்.

'ஊர்மிளா நேற்று இரவு சிவலோகப் பிராப்தி அடைந்து விட்டாள்'.

எனக்குப் பதற்றமோ பரிதாபமோ ஏற்படவில்லை. ஆனால் என் உள்ளம் மட்டும் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தது.

'என் அத்தை வீட்டில் பேய் இருக்கிறதென்று எண்ணினேன். ஆனால் அது பெருச்சாளியாயிற்று. பெருச்சாளிப் பேய் என்னைக் கொல்ல இருந்தது. ஆனால் ஊர்மிளா என்னைக் காப்பாற்றினாள். இப்பொழுது உண்மையிலேயே என் அத்தை வீட்டில் பேய் இருக்கிறது. அது பணப்பேய் - இல்லை - பணப் பெருச்சாளி. அந்தப் பெருச்சாளி பேயாக மாறி அவளைக் கொன்று விட்டது. அவளை அந்தப் பேயிலிருந்து காப்பாற்றத் தவறிவிட்டேன். அவள் சந்தித்ததுபோல, நான் வரும்பொழுது அவளைச் சந்தித்திருந்தால் அவளைக் காப்பாற்றி இருப்பேன்....

அவள் விருப்பப்படி அவளுடைய காதலனை அடைய விடாமல் தடுத்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். அந்தக் கொலைக் குற்றத்துக்கு உடந்தையாயிருந்து விட்டுச் சிவலோகமாம் - பிராப்தியாம் சொல்கிறார்கள் வெட்கமின்றி, அந்தச் சொற்களைப் பார்க்கப் பொறாத என் கண்கள் நீரைச் சிந்தி அந்த எழுத்துகளை அழித்துவிட்டன.