'புனிதம்' என்று அவளை அழைப்பார்கள் எனச் சிறிது வருத்தம் கலந்த குரலில் சொன்னான். 'பெயர் புனிதம்' ஆனால், வாழ்வில் அஃது இல்லை என்று சொல்லிவிட்டு அங்கிருக்க மனமின்றி வேலனிடம் விடைபெற்றுக் கொண்டு, நான் திரும்பிவிட்டேன். வண்டியில் வரும்போதெல்லாம் அவளது நினைவுதான். நம்நாட்டுச் சகோதரிகளின் நிலையை நடுநிலையோடு ஒருவன் சிந்தித்துப் பார்த்தால் அவன் கட்டாயம் பைத்தியக்காரன் ஆகிவிடு வான் என்பதை என்னளவில் அன்று தெரிந்துகொண்டேன். ஒருநாள் வேலன் என்னைச் சந்தித்தான். 'துரை! புனிதம் அன்று உன்னைக் கண்டதிலிருந்து உன்மீது அன்பு கொண்டிருக் கிறாள். என் மனைவியிடம் உன்னை மணந்து கொள்ள வேண்டு மென்று ஆசைப்படுகிறாள் என்பது அவள் பேச்சிலிருந்து நன்றாய்த் தெரிகிறது. நீ விதவை மணம் செய்து கொள்ள விரும்புகிறாயா? விரும்பினால் சொல். நான் அதற்கு முயற்சி செய்கிறேன்' என்றான். 'வேலா! என் குணங்களை நன்கு தெரிந்து கொண்ட நீயா இப்படிக் கேட்கிறாய்? பெண்ணுரிமை வழங்குவதென்றால் முதலில் மறுமணம் தான் கவனிக்கப்பட வேண்டும் என்று நான் பலமுறை கூறி வந்திருக்கிறேன். அவ்வாறிருந்தும் விரும்புவாயா?' என்று கேட்கிறாய். புனிதம் உடன்பட்டால் புகலிடம் தர நான் சம்மதிக்கிறேன். செயலில் இறங்கச் சித்தனாயிருக்கிறேன்' என்றேன். 'அப்படியானால் இதற்கு வேண்டிய ஏற்பாட்டை விரைந்து செய்கிறேன்' என்று சொல்லிவிட்டு வேலன் போய்விட்டான். புனிதம் என் சொத்தாகப் போகிறாள் என்று எண்ணியதும் பூரிப்படைந்தேன். மேலும் மறுமணம் என்றதும் மனம் துள்ளி விளையாடியது. திடீரென்று மகிழ்வு தடைப்பட்டது. யாரோ இருவர் என்முன் நின்றனர். அவர்கள் பேசவும் செய்தனர். "துரை! என்ன செயல் செய்யத் துணிந்து விட்டாய்! நீ நினைப்பது பெருந்தவறு - என்பதை உணராமல் உடன்பட்டு விட்டாய்! அவள் உன் சகோதரி என்று எண்ணியதை மறந்து விட்டாயா?" என்றார் ஒருவர். மற்றவர்; "அதனாலென்ன? அவள் நிலைக்கிரங்கியதால் அந்த எண்ணந் தோன்றியது. அதனால் 'சகோதரி' ஆய் விடுவாளா? |