பக்கம் எண் :

144கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

மேலும் மணந்து கொள்ளு முன்பு யாரும் எந்தப் பெண்ணையும் அப்படித்தான் எண்ணுவார்கள். அது தான் இயல்பு. அவருக்குள் அன்பு தோன்றிக் காதல் பெருகிய பின்பு முதலில் சகோதரர் எண்ணந் தோன்றியதே! அவள் உன்னைக் காதலனாகக் கருதுகிறாள். நீயோ விதவை என்ற சொல்லே இந்த நாட்டில் இல்லாமல் செய்ய வேண்டும் என்று மனமார விழைகிறாய். அதனால் தயங்காதே! தலை நிமிர்ந்து நில்! கூசாமல் குதித்துவிடு!" என்றார்.

"அப்படியானால் நீ உறுதியற்றவனாகிறாய்! மனக் கட்டுப் பாட்டை மதியாதவனாகிறாய்! முதலில் உடன்பிறப்பு என்று எண்ணிவிட்டு, அடுத்து அதை உரிமைப் பொருளாக்க எண்ணுவது, நீ உன் உள்ளத்தையே நம்பவில்லை என்று தான் பொருள்படும். மனம்போன போக்கெல்லாம் போய்க்கொண் டிருந்தால் உலக ஊழியனாக முடியுமா? சீர்திருத்தத் தொண்டு செய்ய முடியுமா? எண்ணிப்பார்! காதலின் ஏவலுக்கு ஆளாகாமல் எண்ணிப்பார்?" என்று முதல்வர் கூறினார்.

இரண்டாமவர் "அவள் காதலை நீ புறக்கணித்து விட்டதால் மட்டும் உன்னை உறுதியுடையவன் என்று கருது கிறாயா? அது தவறு. அப்படியானால் நீ பெருங் கோழை யாகிறாய். சமூகத்தை எதிர்த்து நிற்க அஞ்சுகிறாய்! விதவை பிழிந்தெடுக்கப்பட்ட சக்கைதானே என்று எண்ணு கிறாய். இந்தக் கோழைமனம் இருக்கும் வரை நீ எங்கே தியாகம் செய்யப் போகிறாய்! அது கிடக்கட்டும். உன் நண்பன் வேலனிடம் அன்று உறுதிமொழி கொடுத்தாயே அஃது என்னாவது? அவன்தான் என்ன நினைப்பான்! வாய்ச் சொல்லில் வீரம் பேசும் வஞ்சகன் என்றுதானே உன்னைக் கருதுவான். இதுதான் உன் உறுதியா? மனக்கட்டுப்பாடா? சொல்லி யதைச் செயலிற் காட்ட முனைவதை மனம்போன போக்கு என்பது குறைமதியினர் கூற்றல்லவா? அஞ்சுகிறாயா? அச்சத்தை விடு! எதிர்ப்பைத் துச்சமென எண்ணு! வா! வளங்காண வா! வாகை சூட வா!" என்றார்.

நான் நிமிர்ந்தேன். இருவரும் மறைந்தனர்.

'கண்மூடி வழக்கமெல்லாம் மண் மூடிப் போகட்டும்' யாரோ நெடுந்தொலைவில் பாடுவது போல் மெலிந்த ஓசை என் காதில் மோதியது. சரி. நான் கோழையல்லன். உறுதிமொழியைப் புறக் கணிக்கும் உள்ளமுடையவனுமல்லன். எதிர்த்துச் செல்லும் சுறா நான். பற்றுக்கோடின்றிப் பரிதவிக்கும் அவள் சாய்வது சரியன்று.