'நண்பா! அஃதிருக்கட்டும். நாங்கள் தோண்டிய 'குழிக்கு' அவர்களிடம் 'மண்' கேட்டதால் அல்லவா அவர்கள் மறுத்தனர். நாங்களே முயன்று மண்ணை எடுத்துப் போட்டுக் குழியை மூடி விட்டால் என்ன? 'அதுவும் நல்ல முடிவுதான். அதாவது நீங்கள் இருவரும் யாரும் அறியாமல் சென்றுவிடுவது என்றுதானே கூறுகிறாய்? ஆம்; அப்படிச் செய்வது தான் நல்லது. இல்லாவிட்டால் புனிதம் இறந்தாலும் இறந்துவிடுவாள்' என்று கூறி என் எண்ணத்தை உறுதியாக்கினான். வேலன் மரகதம் இருவரின் உதவியாலும் இன்பபுரிக்கு பயணம் ஆகிவிட்டோம். சில மாதங்கள் கழித்து வேலனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதைப் படித்தேன். உடனே விடை எழுதினேன். என் வாழ்வைப் புனிதமாக்கிய தோழா நாங்கள் நலம். உன் கடிதம் கிடைத்தது. புனிதம் ஓடிவிட்டாள் என்று தூற்றுகிறார்களா? தூற்றட்டுமே! கண் மூடிக் கூட்டங்களுக்கு அதைத் தவிர வே றென்ன தெரியும். ஒரு நாள் தூற்றும். மறுநாள் போற்றும். அந்த நாற்ற வாய்கள். அதைப் பொருட்படுத்தக் கூடாது. 'நண்பா! கண் மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக வேண்டும்' என்ற உயிர் ஒலியை அன்று சொன்னாய். அந்த ஒலியே என் வாழ்வின் மூச்சாகவும் செய்தாய். அதற்கு எங்கள் நன்றி. நாங்கள் அந்த வழக்கத்தை மூடிய இடத்திலிருந்து மலர்ச்செடி முளைத்துள்ளது. அதாவது புனிதம் இன்னும் எட்டு மாதத்தில் தாயாகப் போகிறாள்! அதற்கு நான் சொன்னேன். 'ஆண் குழந்தைதான் பிறக்கும்- அதற்கு வேலன் என்று பெயர் வைப்பேன்' என்று. அவள், 'இல்லையில்லை; பெண்தான் பிறக்கும்; நான் அதற்கு மரகதம் என்று பெயர் சூட்டுவேன்' என்று சொல்லு கிறாள். எப்படியோ இன்னும் எட்டு மாதத்தில் என் குடும்பத்தில் உங்களில் ஒருவர் தோன்றப் போகிறீர்கள்! என்று எழுதி அஞ்சல் பெட்டியில் போடும் போது 'கண்மூடி வழக்கமெல்லாம் மண் மூடிப் போக' என்ற இராமலிங்க வள்ளலார் மறைமொழி என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. |