பக்கம் எண் :

152கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

கிறார், அலங்காரம் செய்து கொள்ளும் பொழுது. இப்பொழுது பக்கத்தில் நிற்கும் பதுமை போன்ற அவள் முகம் அவரது முகத்தி லுள்ள முதுமையை அதிகப்படுத்திக் காட்டியது. வழுவழுப்பான - கண்ணாடிக் கன்னங்கள் - கருங்கல் அரும்பி நிற்கும் தம் கன்னங்கள்- பளிங்கு போன்ற அவள் கண்கள் - ஒளி குறைந்த தம் கண்கள். பருவத்தின் பூரிப்பைச் சுட்டிக் காட்டும் அவளுடைய உறுப்புகள் - பணப்பெருக்கத்தால் தளர்வை மறைத்துக் கொண்டிருக்கின்ற தம் உடற்கூறுகள். இவைகள் மாறிமாறிக் காட்சியளித்தன முதலி யாருக்கு. சட்டென இறங்கிவிட்டார். அதிலிருந்து முதலி யாருடைய உள்ளத்தே ஏதோ ஓர் எண்ணம் கவ்விக் கொண்டது.

*****

மங்களம் வானொலியைத் திருப்பிவிட்டாள். அன்று நல்ல நாடகம். அதை அந்த வீட்டின் ஒரு புறத்தில் குடியிருந்த இளைஞன் வானொலி அறையின் வெளியில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந் தான். நாடகத்தின் பெயர் "காதல் பலி" என்பது. அந் நாடகம் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுவது போலவும், உருக்க மாகவும் இருந்ததால் மங்களம் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள். வெளியில் இருந்த இளைஞன் நாடகத்தின் வாயிலாக நாட்டைப் பார்த்து வருந்திக் கொண்டிருந்தான். நாடகம் முடிந்தது. இளைஞன் எழுந்தான்; முதலியாரும் வெளியில் சென்றிருந்தவர் வந்து விட்டார். இளைஞன் செல்வதைப் பார்த்து விட்டு உள் நுழைந்தார். அவள் கண்ணீரை விரைந்து துடைத்துக் கொண்டிருந்தாள். முதலியாரின் மனக்கண்முன் மாடியில் பார்த்த கண்ணாடி தோன்றியது. உள்ளத் தைக் கவ்விக் கொண்டிருந்த எண்ணம் வேர் ஊன்றத் தொடங்கி விட்டது.

வேரூன்றி விட்டால் கேட்கவா வேண்டும். "நான் வயது ஆனவன். இவள் இளமையின் எடுத்துக் காட்டாக இருக்கிறாள். அவனோ காளைப் பருவத்தான். பஞ்சு இருக்குமிடத்தில் நெருப்பை வைத்திருப்பது சரியில்லை" என்று எண்ணினார். எண்ணத்தின் முடிவில் வீட்டை விட்டுக் காலி செய்யப்பட்டனர் அவ்விளைஞனும் அவனைச் சேர்ந்தவர்களும்.

*****