பக்கம் எண் :

எக்கோவின் காதல்153

போருக்கு முன்பு சிங்கப்பூர் சென்றிருந்த முதலியாரின் மகன் - மூத்த மனைவியின் மகன் அன்று வந்து சேர்ந்தான்.

அவனுக்கு மங்களம் அறிமுகப்படுத்தப்பட்டாள். தந்தை செயல் கொஞ்சம் வருத்தத்தைக் கொடுத்த போதிலும் அவள் நடந்துகொள்ளும் முறையைக் கண்டு தன் தாயில்லாக் குறையை அவள் நிறைவேற்றுவாள் என்று மகிழ்ச்சியடைந் தான்.

அவள் அவனிடம் மிக அன்பாகப் பழகினாள். அவனுக்கு வேண்டியவற்றை ஒரு குறையும் இல்லாமல் செய்து வந்தாள். இருவரும் எவ்விதக் களங்கமுமின்றிப் பழகிவந்தனர்.

ஆனால் முதலியாருக்கு அஃது ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. அவனோடு அவள் சிரிப்பதும் பேசுவதும் அவருடைய உள்ளத்தில் வேரூன்றியிருந்த எண்ணத்திற்குத் தண்ணீர் வார்த்தது போன்றிருந்தது. என்ன செய்வது! ஒன்றும் சொல்லவும் முடிய வில்லை. அவர்களை அப்படிப் பழக விடவும் மனமில்லை. உழன்று கொண்டிருந்தார்.

*****

"ங்களம்! அந்தச் சாவிக் கொத்தைக் கொடு! வைர நகைகளை எப்பொழுதும் போட்டிருக்காதே. 'கெட்டு விடுமல்லவா! பெட்டியில் கழற்றி வைத்துக் கொள். பட்டுப் புடவைகளை நாள்தோறும் கட்டினால் எதற்காகும்? சாதாரணச் சேலைகளைக் கட்டிக் கொண்டாலென்ன? ஏதாவது "விசேடம்" வந்தால் அப்பொழுது கட்டிக் கொள்வது சரி" என்று முதலியார் கொஞ்சம் கண்டிப்பில் இறங்கிவிட்டார்.

ஒருநாள் பக்கத்தூருக்குச் சென்றிருந்தவர் மறுநாள் தான் வந்தார். வந்தவர் தன் மகன் அறையில் ஏதோ வேலையாக நுழைந்தார். படுக்கை விரிக்கப்பட்டிருந்தது. அதில் மலர்கள் சிதறிக் கிடந்தன. கச்சு ஒன்றும் கிடந்தது. முதலியாருக்கு வேல் கொண்டு குத்துவது போன்றிருந்தது. "கண்ணாடிமுகம்" தோன்றியது. வேரூன்றிய செடி பூத்துக் காய்க்கத் தொடங்கி விட்டது.

"அடப்பாவி! இந்தக் காரியம் செய்யலாமா? உன் அப்பனுக்கும் மனைவி, உனக்கும் மனைவியா? ஓர் இரவு நானில்லை. இப்படி நடந்து விட்டதே! அடி சண்டாளி! உனக்குத்தான் இஃது அடுக்குமா? பாவ புண்ணியத்திற்குக் கொஞ்சமாவது அஞ்சினாயா? என்று துடிதுடித்தது அவருள்ளம்.