பக்கம் எண் :

158கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

5
கடைமுழுக்கு

"டடா? என்ன தெய்வகளை! அந்த முகத்திலே எவ்வளவு சாந்தம்! வைரங்கள் 'பளிச், பளிச்'சென்று 'டால்' அடிப்பதைப் பாருங்கள்! அந்த உடம்பைப் பாருங்களேன்! என்ன தேஜசு! கண்கள் அப்படியே கருணையைப் பொழிகின்றனவே! எல்லாம் ஈசுவரானுக் கிரகம், அவர் தெய்வாம்சம். அரகரமகாதேவ!"

"டே, கண்ணா! இந்தப் பைத்தியத்தைப் பாருடா! தெய்வாம் சமாம்! ஈசுவரானுக்கிரகமாம்! அந்த ஆசாட பூதியின் கண்ணிலே கருணையா பொழிகிறது! காதலை அல்லவா கக்குகின்றன அந்தக் கண்கள். அதோ அவள் அழகிலே ஈடுபட்டு அப்படியே சொக்கிப் பிள்ளையார் போல் உட்கார்ந்திருக்கும் இவரைப் பார்த்து இப்படி யெல்லாம் உளறுகிறானே!"

அன்று ஐப்பசி மாதக் 'கடைமுழுக்கு', காவிரியிலே பாவத்தைக் கழுவிப் புண்ணிய உருவங்களாகத் திகழ வேண்டும் நாள் அது. அன்று நானும் என் நண்பன் மாறனும் மழையில் அகப்பட்டு ஒதுங்கி நின்றபோது பண்டார சந்நதிகள் அழகிலே ஈடுபட்ட பக்தர் பகர்ந்ததையும், அதைக் கேட்ட மாணவர்கள் பேச்சையுந்தான் மேலே தந்துள்ளேன்.

நாங்கள் அங்குச் சென்றது முழுக்குக்கு அன்று; அங்கு நடந்த ஆண்டு விழாவில் பங்குபெறச் சென்றிருந்தோம். நான் தேசியவாதி, மாறன் பெரிய சீர்திருத்தவாதி! கொள்கையில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள். இருப்பினும் நட்பில் எதுவும் குறுக்கிடாது. "நாமிருவ"ராகவே இருந்து வந்தோம். 'காந்தி - ஜின்னா சந்திப்பை ' விட எங்கள் சந்திப்பை - நட்பை வெகுவாகப் பேசுவார்கள். பள்ளித் தோழமை அவ்வாறு வளர்ந்திருந்தது.

மாறா! பேச்சைக் கேட்டாயா! எல்லாம் இந்தச் "சூனா மானா"க்களால் வந்த வினையப்பா. கடவுட் கொள்கையைப் பற்றிக் கண்டபடியெல்லாம் "பிரச்சாரம்" செய்து வந்ததால் நேர்ந்த விளைவு இது" என்றேன்.