"சுந்தரம்! வீணாகப் பழிசுமத்தாதே! மக்களிடையே அறிவு வளர வளர மடமை மறைகிறது. இதற்கும் யாரும் பொறுப்பாளி யல்லர். காலச் சூழலில் சிக்குண்ட கண்மூடிக் கொள்கை சிதறுண்டு போவதற்கு யார்தான் என்ன செய்ய முடியும்?" என்று சொற் பொழிவு செய்யத் தொடங்கிவிட்டான் மாறன். ஆனால் நான் அவன் பேச்சைக் கவனிக்கவேயில்லை. என் மனத்தையும் கண்ணையும் எதிரில் மழைக்கு ஒதுங்கியிருந்த மங்கையிடம் செலுத்திக் கொண்டிருந்தேன். அவளுடைய அழகின் வயப்பட்ட மனத்தை மாற்ற முடியவில்லை. மழையில் நனைந்த வெண்மையான ஆடை அவள் உடலின் சிவப்பை எடுத்துக் காட்டி என் உள்ளத்தை இழுத்துக் கொண்டிருந்தது. நகைகள் போட்டிருந் தால் அந்த நங்கையின் அழகு கொஞ்சம் குறைவாகத்தான் தோன்றும். அதை அறிந்து தானோ என்னவோ அவள் நகை அணியவில்லை. அழகான அந்த முகத்தில் ஏதோ ஒரு வாட்டம் - கவலைக் குறி ஊடாடியது. நீராடியதால் நனைந்து தொங்கிக் கொண்டிருக்கும் அந்தக் கூந்தலிலிருந்து மழைநீரைத் தட்டிக் கொண்டிருக்கும் பொழுது ஒவ்வொரு அசைவிலும் என்மனம் ... அதிகம் ஏன் சொல்ல வேண்டும் - என்னையே மறந்தேன். "சுந்தரம்" என்று தோளில் தட்டினான் என் நண்பன். தூக்கிவாரிப் போட்டது. சுய உணர்வு பெற்றேன். "சுந்தரம்! நான் சொல்லிக் கொண்டேயிருக்கிறேன். நீ வேறு கவனமாக இருக்கிறாயே!" என்று ஆச்சரியத்துடன் கேட்டான். "அதோ பார் அந்தப் பாவையை. பொற்சிலை போன்ற அவள் அழகைப்பார். தெய்வலோகப் பெண்போல்....!" "சேச்சே எங்கே போனாலும் இந்த வேலைதானா! வழியில் போகிறவர்களைப் பற்றி நமக்கென்ன? அது சரி தெய்வலோகத்தில் எத்தனை நாளப்பா இருந்தாய்?" என்று கிண்டல் செய்தான். "மாறா! நீயே பார்! உன் மனமுங்கூடக் கெட்டுவிடும் அவளைப் பார்த்தால்! என்று சொல்லிக்கொண்டு அவனுடைய முகத்தை அவள் பக்கம் திருப்பினேன். அவளைப் பார்த்ததுதான் தாமதம் மாறன் முகம் மாறிவிட்டது. என் கையைப் பிடித்துப் பரபர என்று இழுத்துக் கொண்டே சென்று விட்டான். மழையைக் கூடப் பொருட்படுத்தவில்லை. நான் அந்த இடத்தை விட்டு நீங்கினேனே ஒழிய அவள் என் மனத்தை விட்டு நீங்கவில்லை. |