166 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12 |
பொங்கலும் வந்து சேர்ந்தது. திருமணம் விமரிசையாக நடந்தது. கடை முழுக்கன்று அவளை விதவையாகக் கண்டேன். இன்று அவள் விதவை என்ற சொல்லுக்குக் கடைமுழுக்குப் போட்டுவிட்டாள். வாழ்த்துகள் - பரிசுகள் - அடேயப்பா! சொல்லிமுடியாது. சீர்திருத்தத் திருமணம் அல்லவா! வெளியூரி லிருந்து ஏராளமான கடிதங்கள் வந்திருந்தன. அவற்றை எடுத்துக் கொண்டுபோய் மாடியில் அவளும் நானும் ஒவ்வொன்றாகப் படித்துக் கொண்டிருந்தோம். ஒரு கடிதம் மட்டும் என் கவனத்தை அதிகமாகக் கவர்ந்தது. அது என் நண்பன் மாறன் கடிதம். ஆவலோடு பிரித்தேன். படித்தேன். ஆருயிர் நண்பா! உன் மணத்தில் பங்கெடுத்துக் கொள்ளா மைக்கு என்னை மன்னிப்பாயா? கட்டாயம் மன்னிப்பாய். நான் சீர்திருத்தம் பேசினேன். செயலில் காட்டவில்லை. அவளை - இல்லை மன்னிக்கவும் - உன் மனைவியைத் தாசியாக்கியது சமூகம் மட்டுமன்று. நான்தான் முதற்காரணம். அவள் என் அத்தைமகள். என் தாய் சொல்லுக்காக அவளை மணக்க மறுத்தேன். அவள் அந்நிலைக்கு ஆளானாள். அந்நிலைக்கு ஆளாக்கிய நான் அவள் முகத்தில் எப்படி விழிப்பேன். எப்படி உன் திருமணத்தில் தொண் டாற்ற முடியும்? இப்பொழுது என்னை மன்னிப்பாயா? உங்கள் இருவரையுமே வேண்டுகிறேன் மன்னியுங்கள் என்று. இயன்றால் உங்கள் பிள்ளைகளின் திருமணத்திற்குச் சிங்கப்பூரிலிருந்து வருகிறேன். இன்று கப்பலில் புறப்படுகிறேன். வணக்கம். மன்னிப்பை வேண்டும். மாறன். ***** கண்ணீரைத் துடைத்துக்கொண்டே கடிதத்தை முடித்தேன். அவளும் விம்மி விம்மி அழுதாள். அந்த விம்மலை மாற்ற வானொலி யைத் திருப்பி விட்டேன். மாறன் கடை முழுக்கன்று அவளைப் பார்த்தவுடன் மழையையும் பாராமல் என்னை இழுத்துக் கொண்டு சென்றதன் காரணம் இப்பொழுது தான் தெரிந்தது. அவன் மணக்க வேண்டிய பெண் இப்பொழுது என் மனைவி. ம்ம்! நமது மூடத்தனங்களுக்கு என்று "கடை முழுக்கு" வருகிறதோ என்று உள்ளுக்குள்ளே சொல்லிக்கொண்டேன். |