பக்கம் எண் :

168கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

நான் எனது தமிழகத்தை - சென்னையை விட்டுச் சிங்கப்பூருக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகின்றன. கடைகளில் கணக்கெழுதி அதனால் வரும் ஊதியத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தேன். அங்கு நான் இருந்த வீட்டின் எதிர்வீட்டுப் பெண் தான் கமலம். அவளுக்கும் எனக்கும் காதல் எப்படியோ தோன்றி - வளர்ந்து - முற்றிப் பலனளிக்கத் தொடங்கிவிட்டது. இப்பொழுது அவள் என் காதலியில்லை; மனைவி.

அவள் பல முறை 'சுயமரியாதை'ப் பாட்டு சம்பந்தமாக நிகழ்ந்ததைக் கேட்பாள். கேட்கும் பொழுதெல்லாம் நான் மழுப்பி விடுவேன். அந்தப் பாட்டுத்தான் என்னைக் கொலைக் காரன் ஆக்கியது. நான் கொலைக்காரன் என்று தெரிந்தால் அவள் என்ன நினைப்பாளோ என்ற அச்சத்தால் அதைப் பற்றிக் கூறவேயில்லை.

ஒருநாள் என் கடிகாரத்தைக் காணவில்லை.

"கமலம்! கடிகாரத்தைப் பார்த்தாயா?" என்றேன்.

"இல்லையே! நான் பார்க்கவில்லையே!" என்று சிரித்தாள்.

அந்தச் சிரிப்பு அவள் திருட்டுத் தனத்தை வெளிப் படுத்தியது.

அட அசடே! உள்ளதைச் சொல்லு! இதிலென்ன விளை யாட்டு, தங்கச் சங்கிலியல்லவா அது! என்றேன்.

"ஆம், நீங்கள் மட்டும் தங்கச் சங்கிலி போட்டுக் கொள்ள வேண்டும்; நான் போட்டுக் கொள்ளக் கூடாது. எத்தனை முறை உங்களைக் கேட்டேன். தங்கவளையல் வேண்டும் வேண்டுமென்று. அதைப் பற்றிய கவலை கொஞ்சங் கூட உங்களுக்கு இல்லையே. அதனால்தான் நான் அதை எடுத்து ஒளித்து வைத்திருக்கிறேன். என்றைக்கு வளையல் வருகிறதோ அன்றுதான் உங்கள் கடிகாரமும் வரும்" என்று சொல்லிவிட்டுச் சமையல் அறைக்கு ஓடிவிட்டாள்.

"ம் ம் இருக்கட்டும். பெட்டியில் தானே வைத்திருப்பாள்" என்று எண்ணி அவளுக்குத் தெரியாமல் சாவியை எடுத்து அவளுடைய பெட்டியைத் திறந்தேன். சில சீலைகளை எடுத்தேன். அடியில் கடிகாரம் இருந்தது. அதனடியில் சில கடிதங்களும் இருந்தன. எனக்குப் பல அய்யங்களை எழுப்பின அந்தக் கடிதங்கள். "இவளுக்குக் கடிதங்கள் வரக் காரணம் என்ன? யார் எழுதியது? அதை ஏன் இவ்வளவு மறைவாகப் பத்திரப் படுத்தி வைக்கவேண்டும்?" என்று எண்ணினேன்.