அம்மா! நலம் என்று எழுத என் கைகள் நடுங்குகின்றன. உன் மகள் இப்பொழுது விதவை. யாரோ ஒரு பாதகன் உன் மருமகனைக் கொன்றுவிட்டான். தமிழாசிரியர்கள் ஒன்று கூடிக் கழகம் ஒன்று நிறுவித் தமிழை முதன் மொழியாக்கவும், சம்பள உயர்வுக்காகவும் பாடுபட்டார்கள். அதில் உன் மருமகன்தான் செயலாளர். அல்லும் பகலும் அரும்பாடுபட்டு வந்தார். சில இரவுகளிலே வீட்டிற்குக் கூட வருவதில்லை. அமைச்சர்கள் வீட்டிலே அவருடைய பெயர் அடிக்கடி சொல்லப்படுகிறது என்று கூடக் கேள்வி. உடன் வேலை செய்யும் கூட்டத்திலே கூடப் பொறாமை கொண்ட விரோதிகள் இருந்ததாகவும் சொல்லுகிறார்கள். எப்படியோ தெரியவில்லை. எவனோ பாவி என் அன்பரைக் குத்திக் கொன்றுவிட்டான். வழக்கு ஒன்றுமில்லாது போயிற்று. ஆம்; ஏழைத் தமிழாசிரியனை அதுவும் - சீர்த்திருத்தக்காரனை யார் கவனிக்கப் போகிறார்கள்? இனிமேல் என்னைக் "காக்கை!" என்று அன்போடு அழைக்க யார் இருக்கிறார்கள்? இங்குள்ள புறநானூறு - கலித்தொகை அந்தப் புத்தகங்களைப் பார்க்கும்போது நெஞ்சம் குபீர் என்று - பற்று கிறதே! பாவி! என் உயிரைப் பிரித்து விட்டானே! அவனைத் திட்டுவதால் பலன் என்ன? நாட்டின் மீது உண்மையாகப் பற்றுக் கொண்டு - எதையும் தியாகம் செய்கின்ற - நேர்மையான தொண்டர் களுக்குக் கிடைக்கும் பரிசில் இது தானே! அம்மா! நான் ஆதரவற்று நிற்கிறேன். காக்கை. படித்துக் கொண்டிருந்தேன். பூமி சுற்றியது. தடார் என்று பெட்டியின் மீது மயங்கிவிழுந்து விட்டேன். அதன்பின் நடந்த தொன்றும் எனக்குத் தெரியாது. விழித்துப் பார்க்கும் பொழுது என் மனைவி கமலத்தின் மடியில் படுத்திருந்தேன். "ஏன் இப்படி மயங்கி விழுந்துவிட்டீர்கள்?" என்று கேட்டாள் கமலம். "ஒன்றுமில்லை, சொல்லுகிறேன்; இந்தக் கடிதத்தையும் படி!" என்றேன். வாங்கிப் படித்தாள். அம்மா! |