176 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12 |
7 கிருஷ்ணார்ச்சுன யுத்தம் "அவன் இப்பொழுது மட்டுமில்லை என்னோடு போட்டி போடுவது; எப்பொழுது பார்த்தாலும் போட்டிதான். எதை எடுத்தாலும் போட்டிதான்; பழனி! இனிமேல் அவனைச் சும்மா விடப் போவதில்லை. என்றைக்காவது ஒருநாள் என் குணத்தைக் காட்டத்தான் போகிறேன். என்னைவிட அவன் எந்தவகையில் சிறந்தவன். ஏதோ அழகாகப் பேசத் தெரிந்திருக்கிறான். அவ்வளவு தானே! காரியத்திலே ஒன்றையும் காணோமே?" என்று கிருஷ்ணன் தன் நண்பன் பழனியிடம் கூறினான். "சேச்சே! அவன் அப்படிப் போட்டி மனப்பான்மை படைத்த வனில்லையே! நிரம்ப நல்ல குணங்கள் படைத்தவன். அதுவும் தொழிலாளர் கழகம் என்றால் அல்லும் பகலும் பாடுபடுகிறான். அவனை இப்படி எல்லாம் சொல்லுகிறாயே!" என்று சமாதானம் கூறினான் பழனி. "நல்லவனா! போப்பா! உனக்கு அவன் குணம் சரியாகத் தெரியாது; அப்படியானால் நம் கழகச் செயலாளர் தேர்தலுக்கு நான் நிற்கும் போது அவன் ஏன் போட்டியிடுகிறான்?" "அவன் தேர்தலுக்கு நிற்கவில்லை என்றுதான் சொன்னான். நமது தோழர்கள்தாம் அவனைக் கட்டாயப் படுத்தி நிற்கும்படி சொல்லியிருக்கிறார்கள்". "நிற்கட்டும் நிற்கட்டும்! அவனைத் தோற்கடிக்கா விட்டால்..." மனோகரா மில் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் நன்மைக்காக ஒரு கழகம் நிறுவியிருந்தார்கள். அந்த மில் தொழி லாளர்கள்தாம் கிருஷ்ணனும் அவனால் குறை கூறப் பட்ட அர்ச்சுனனும். அர்ச்சுனன் மேடையில் நன்றாகப் பேசுவான். பிழை என்று பட்டதை அஞ்சாது எடுத்துக் கூறுவான். தொழிலாளர் நலனுக்கு எந்தெந்தத் துறைகள் முட்டுக் கட்டையாகத் தோன்றுகின்றனவோ அவற்றை யெல்லாம் வன்மையாகக் கண்டிப்பான்; முற்போக்குக் கொள்கை யுடையவன் |