"தவறாக நான் ஒன்றும் நினைக்கவில்லை. உங்களுக்கும் திருமணமாகவில்லை எனக்கும்!" "நீங்கள் மாதர் கழகச் செயலாளர். ஆதலால் நீங்களும் நாட்டிற்காக ஒத்துழைப்பீர்கள் என்றல்லவா நான் இவ்வளவு நெருங்கிப் பழகினேன்!" "ஆம், அதிலென்ன தவறு. நானும் அதைத்தான் கூறுகிறேன். வெளியிலிருந்து உதவுவதை விட உடனிருந்து உதவலாம் என்று எண்ணுகிறேன். வாழ்க்கைத் துணைவியாயிருந்து துணை செய்ய எண்ணுகிறேன். ஏன் இப்படி நடுங்குகிறீர்கள்?" மதுரம் அம்மையே? உங்கள் கையிலும் என் கையிலும் பொறுப்பு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது என்பதை மறந்து பேசுகிறீர்கள். பொறுப்புள்ள நாமே தவறிவிட்டால் மற்றவர்கள் என்ன நினைப் பார்கள்!" "அப்படியானால் பொறுப்பை ஏற்பவர்களுக்குக் காதல் வாழ்வே கிடையாதா?" "ஆம்; என் வரையில் அப்படித்தான். என் நாட்டு மக்கள். என் இனத்தவர் அடிமைப்பட்டு, மாற்றான் காலடியில் மடிந்து கிடப்பதைக் கண்டு என் நெஞ்சு கொதிக்கிறது. அவர்களின் நலத்தைக் கருதி விடுதலை வேட்கை ஊறிக் கிடக்கும் என் நெஞ்சத்தில் காதலுக்கு இடமில்லை. என் கழுத்து மண மாலையைத் தாங்காது. நாட்டின் விடுதலைக்காகத் தூக்குக் கயிற்றை வேண்டுமானால் மகிழ்வுடன் தாங்கும். உங்கள் எண்ணத்தை விட்டுவிடுவதுதான் நல்லது" என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அவன் கண்கள் அவள் கன்னத்தைவிட அதிகமாகச் சிவந்திருந்தன. "சரி! நான் நாளைக் கூட்டத்திற்கு வருகிறேன்; நீங்கள் போய்வரலாம்! என்று விடை தந்தாள். மதுரம் கண்ணீர் சொட்டு வதை அவன் பார்க்கவில்லை. சென்றுவிட்டான். "அப்பப்பா பட்டணத்தில் குடியிருக்க இடம் கிடைத்தாலும் இவர் உள்ளத்தில் இடம் கிடைக்காது போல் இருக்கிறதே" என்று எண்ணிக்கொண்டே படுத்து விட்டாள். கிருஷ்ணனுக்கு நல்ல 'சந்தர்ப்பம்' கிடைத்தது. 'காந்தி சங்க'த்திற்கு விரைந்து சென்றான். "நாளைக் கருப்புச் சட்டை ஊர்வலம் நடக்கப்போகிறதாம். என்ன அட்டகாசம் செய்கிறார்கள்! |