182 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12 |
நாளைக்கு இவர்கள் கொட்டத்தை அடக்க வேண்டும். என்ன சொல்லுகிறீர்கள்? என்று அங்கு இருந்தவர்களோடு 'மந்திரா லோசனை' செய்தான். ஒருவர் "அவர்கள் கூட்டம் நடத்தினால் நமக்கென்ன? நமக்கு அவர்கள் என்ன கெடுதல் செய்கிறார்கள்?" என்றார். "இவன் ஆகஸ்டு துரோகியல்லவா! இப்படித்தான் பேசுவான். அந்தப் பயல்களெல்லாம் கூடிக்கொண்டு நம்மையெல்லாம் திட்டுகிறார்கள். இவன் என்னடான்னா 'என்ன கெடுதல் செய் கிறார்கள்' என்று கேட்கிறான். இப்படிப்பட்ட ஆள் இருந்தால் நம்ம கட்சி உருப்பட்ட மாதிரிதான்" என்றான் கிருஷ்ணன். "நான் வருகிறேன். நான் வருகிறேன்" என்று அவருள் சிலர் மார்தட்டிக் கிளம்பினர். மறுநாள் செய்ய வேண்டிய வேலைத் திட்டங்கள் தீட்டப் பட்டன. அதற்கு வேண்டிய முயற்சிகளும் இரவிலேயே நடந்தன. மாபெரும் ஊர்வலம். வீதியின் இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடிவரை ஒரே அணிவகுப்பு. கருப்புக்கொடி தாங்கி வரும் வீரர்களின் தோற்றம் பாண்டியனின் மறப்படையை நினைப் பூட்டியது. பார்ப்பவரின் மனத்தில் ஒரு புத்துணர்ச்சியை ஒரு விதக் கிளர்ச்சியை எழுப்பி விட்டது. குதிரையில் ஏறி இருபுறத்தும் வீரர் பெருமிதத்தோடு வரும் காட்சி. 'திராவிட நாடு திராவிடர்க்கே' என்ற முழக்கம் - இவை வடநாட்டு வணிகர்க்கும் வைதிகத் தருக்கினர்க்கும் பெருங்கிலி' யை உண்டாக்கியது. ஊர் முழுதும் வலம் வந்து கடைசியில் கூட்டம் நடைபெறும் இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தது படை. பெருவீதியில் வந்து கொண்டிருந்தது மிகுந்த உற்சாகத்துடன். சோடா புட்டிகள், வீதியின் இருபுறத்திலுமுள்ள மாடிகளிலிருந்து குண்டுகள் போல் படையை நோக்கிப் பாய்ந்தன. திரண்டு வரும் படை மருண்டது. "மருள வேண்டாம், அதோ நமது இடத்தை அணுகி விட்டோம். உங்கள் முழக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டு விரைந்து நடங்கள்" என்ற ஆணை தலைவரிடமிருந்து வந்தது. "அடைந்தே தீருவோம் திராவிடநாடு" என்ற பேரொலி யோடு படைவிரைந்தது. |