கண்ணாடித்துண்டுகள் நிரம்பிய போத்தல் ஒன்று குறி பார்த்துக் குதிரைவீரன் தலையில் தாக்கியது. "அம்மா!" என்று தலையில் கை வைத்தான் வீரன். குதிரையி லிருந்து கீழே விழுந்துவிட்டான். விழுந்ததும் பாட்டில் வந்த திசையை நோக்கினான். கிருஷ்ணன் மறைவதைப் பார்த்து விட்டான். தலையிலிருந்து பீறிட்டுக் கொண்டுவரும் இரத்தம் அவன் அணிந் திருந்த கருப்புச் சட்டையைச் சிவப்புச் சட்டையாக மாற்றியது. சிலர் அவனருகில் ஓடிவந்து "தலைவரே! உடனே விடை தாருங்கள். அந்தக் காலிகளைப் பழிக்குப்பழி வாங்குகிறோம். அவர்கள் எலும்பைச் சூறையாடி விடுகிறோம். விடை தாருங்கள்" என்றனர். "தோழர்களே! வேண்டாம்; நமது குறிக்கோள் அதுவன்று. நம்மைத் தாக்கியவர்களும் நமது இனத்தவரே. பதிலுக்காக நாமும் அவர்களைத் தாக்கினால் நட்டம் யாருக்கு? பதறாதீர்கள். புறப் படுங்கள் நாம் அடைய வேண்டிய இடத்திற்கு" - என்று சொல்லி விட்டு அந்த வீரன் எழுந்து நடந்தான். "இந்த அர்ச்சுனன் எப்பொழுதும் இப்படித்தான். நம்மை எதிரி தாக்கும் பொழுதும் நாம் பணிந்து சென்றால் கோழை என்றல்லவா எண்ணுவார்கள்" என்று சில இளைஞர்கள் முணு முணுத்துக்கொண்டே திருப்பிய கொடியை மீண்டும் உயர்த்திப் பிடித்துக் கொண்டு அணியாகச் சென்றடைந்தனர் கூட்டம் நடக்கும் இடத்தை நோக்கி. கொடியேற்றி வைக்க வந்திருந்த மதுரம் அடிப்பட்ட அர்ச்சுனனைப் பார்த்தாள்; பதறிவிட்டாள். செய்தியைக் கேட்டு அறிந்து கொண்டாள். முதல் நாள் ஏற்பட்ட தோல்வியால், என்ன பேசுவதென்று தோன்றாமல் வந்திருந்த மதுரத்தின் நெஞ்சம் கொதித்தது; குதித்தெழுந்தாள். "தலைவர்களே! தோழர்களே! திராவிடர் கழகக் கொடியை ஏற்றுமுன் அதைப் பற்றி இரண்டொரு சொற்கள் கூற ஆசைப் படுகிறேன். இக்கொடி திராவிடரின் இழிவு நிலையை அறிவுறுத்தவே அமைக்கப்பட்டது என்பது உங்களுத்குத் தெரியும். அந்த இழிவு நிலையை நீக்க வேண்டும் என்பதற் காகத்தான் நடுவில் சிவப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சிவப்பு சாதாரணச் சிவப்பன்று. |