பக்கம் எண் :

184கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

இரத்தச் சிவப்பு. தாளமுத்து நடராசன் சிந்திய சிவப்பு அது. இதோ நம் கண்முன் காட்சியளிக்கும் வீர அர்ச்சுனன் சிந்திய இரத்தச் சிவப்பு அது. கருங்காலிகள் வீசிய கல்லெறியால் ஏற்பட்ட காயங் களிலிருந்து பெரியார் சிந்திய இரத்தச் சிவப்பு அது. ( கை தட்டல்) கை தட்ட வேண்டாம். இப்படிப் பல வீரர்கள் சிந்திய இரத்தத்தால் ஏற்பட்ட சிவப்பு அது. இது மட்டும் போதாது நமது இழிவு நிலை நீங்க. இன்னும் சிந்த வேண்டும்; இரத்தம் மட்டுமன்று. உயிரையுங் கூடத்தான். அப்படிச் சிந்தினால்தான் அந்தச் சிவப்பு இன்னும் விரிவடையும். விரிய விரியக் கருப்பு நீங்கிச் சிவப்புக் கொடியாக மாறும். அவ்வாறு மாற்றுவதற்குரிய வீரர்கள் தாம் நமது கழகத் திற்குத் தேவை. விரைவில் நம் கையாலேயே - அதுவும் என்போன்ற பெண்கள் கையாலேயே கொளுத்தப்பட வேண்டும் இந்தக்கொடி (கைதட்டல்) ஆம்; இழிவு நீங்கியபின் இந்தக்கொடி ஏன்? ஆகவே தோழர்களே! திராவிட இனத்தவர் அனைவரும் ஒன்று கூடினால் வெற்றி பெறுவது உறுதி. அந்த வெற்றிக்குப்பின் அமைக்கப் போகும் திராவிட அரசியல் கொடியையும் நானே ஏற்றிவைக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன் என்று பணிவுடன் கூறி இக் கொடியை ஏற்றி வைக்கிறேன்" என்று வீரவுரையாற்றி அமர்ந்தாள் மதுரம்.

தள்ளாடிக்கொண்டே எழுந்தான் அர்ச்சுனன், "தோழர்களே! வீர இளைஞர்களே! மன்னிக்க வேண்டும். உங்கள் வேகத்தைத் தடுத்ததற்காக. பழிக்குப் பழி என்று துடிக்கும் உங்கள் இதயத் துடிப்பை நான் நன்கு அறிவேன். பதிலுக்குத் தாக்கும்படி நான் கூறியிருந்தால் அதனால் நமது உண்மையான எதிரிக்கு ஒரு சிறு அசைவு கூட ஏற்படப் போவதில்லை. இருபாலும் திராவிட இரத்தமே சிந்தும். அறிவியக்கத்தைச் சேர்ந்த நாம் அவ்வாறு நடந்து கொள்வது அழகன்று. மேலும் அவ்வாறு நடந்திருந்தால் இன்றையக் கூட்டம் குழப்பமாயிருக்கும். நமது குறிக்கோள், நோக்கம் எல்லாம் பழிவாங்குவதில்லை. உயிரைப் பலிகொடுத்தேனும் இன்பத்திரா விடம் காண்பது தான் நமது எண்ணம். அதைவிடுத்துச் சிறு சிறு பூசலுக்கு நாம் நமது ஆற்றலை சக்தியை..." என்று சொல்லிக் கொண்டிருந்தவன் மயங்கி விழுந்து விட்டான்.

*****