188 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12 |
அவள் கையைத் தொட்டு வாங்கினேன். அவள் எண்ணத்தை அறிய வேண்டு மல்லவா? அதற்காகத்தான்! ஆனால், அவள் அதைப் பொருட் படுத்தவேயில்லை. எனக்கென்ன, அதைப்பற்றி! அவள் கையில் என் கைப்பட்டதே எனக்குப் பேரின்பமாயிருந்தது. இதோ! இதையும் படியுங்கள்! என்றேன். 'அது என்ன...?' 'அழகின் சிரிப்பா-?' 'ஆம்! உன் ஒவ்வொரு அங்கங்களிலும் ஓடி விளையாடும் அழகின் சிரிப்பிலே நான் மயங்கி விட்டேன். அதை நீ உணரவே இதைப் பொறுக்கி எடுத்துத் தந்துள்ளேன்' என்று கூறினேன். அவளிடமன்று; மனத்திற்குள்ளே. மறுநாள் உன் சிரிப்பிலே மயங்கிய எனக்கு 'முத்தந் தர மாட்டாயா? என்ற கருத்தை உட்கொண்டு 'எதிர்பாராத முத்தம்' என்ற புத்தகம் தந்தேன். அதன்பின்னர், உன் அன்பைப் பெறாது கலக்கமடைந்த எனக்கு அமைதி தரமாட்டாயா? அமைதி பெற நான் உயிர் வாழ ஒரு நல்ல தீர்ப்பைக் கூறமாட்டாயா? என்ற கேள்வி களைக் கேட்கவேண்டும் அவளிடம் என்று துணிந்த பின்பும், மனம் வரவில்லை சரி! நமக்குத்தான் புத்தகம் இருக்கிறதே, அதன் மூலம் கேட்டு விடலாம் என்ற நோக்கந்தான் 'அமைதி', 'நல்ல தீர்ப்பு' என்ற இரு நூலையும் அவளிடம் கொடுக்கத் தூண்டிற்று. இப்படி எத்தனையோ புத்தகங்கள் கொடுத்தேன். ஆனாலும் முதல் நாள் பார்த்த பார்வையிலிருந்து கொஞ்சமாவது மாற்றமடைய வில்லை. அதே அமைதிதான் நிறைந்திருந்தது. கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தேன். ஒரே ஒரு புத்தகம். அவள் என் குடும்பத்தில் ஒரு மணி விளக்காக ஒளி வீசவேண்டும். ஆனால் எப்படிச் சொல்வது? பழைய வழக்கப்படியேதான் செய்தேன். இன்று சுறுசுறுப்பாகச் சென்றேன் கடற்கரைக்கு. அவளும் 'ஆஜர்' தான்! 'இதைப் பார்த்தீர்களா?' என்று நான் எடுத்துச் சென்ற புத்தகத்தைக் கொடுத்தேன். 'எங்கே பார்க்கலாம்! என்ன புத்தகம்?' என்று கையை நீட்டினாள். |