பக்கம் எண் :

எக்கோவின் காதல்189

'குடும்ப விளக்கு' என்றேன்.

நெருப்பைத் தொட்டதுபோல் வெடுக்கென்று எடுத்துக் கொண்டாள் கையை. முகத்தைப் பார்த்தேன். மலர் முகம் வாடியது. குடும்ப... விளக்கு... என்று முணுமுணுத்தது அவள் வாய். நீர் கண்ணில் தாவிக் குதித்துக் கொண்டிருந்தது. கண்ணீரைக் கண்ட என் மனம் கரைந்துவிட்டது.

'ஏன்? இப்படித் திடீரென்று மாற்றம்-? ஏதாவது... துன்பம்...' என்று பரிவுடன் கேட்டேன். அழுகை மிகுதி யாயிற்று.

'அப்படியொன்றுமில்லை. என் சகோதரர் போன்ற உங்களிடம் எனக்கென்ன வருத்தம். இந்தப் புத்தகம் என்னை இந்நிலைக்காக் கிற்று'.

புத்தகமா? புத்தகத்திற்கும் உங்கள் நிலைக்கும் என்ன சம்பந்தம்?

'ஆம்! புத்தகந்தான்! கேளுங்கள், என் கதையை! வக்கீல் வரதாச்சாரி மகள் நான். கமலம் என் பெயர். பணம் நிறைய இருந்ததால் மணத்தைப் பற்றி எண்ணாமல் படிப்பிலேயே சென்று கொண்டிருந்தது, என் இளமைப்பருவம். பணம் இருந்தால் பெண்ணுக்கு எத்தனை வயதானால் என்ன? மணம் தானாக நடக்கும். அந்த எண்ணத்தில் என் தந்தை இருந்தார். நானும் படித்து வந்தேன். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் முதலிய பல மொழிகளிலும் பயிற்சி பெற்றேன். எனக்குத் தமிழ் சொல்லிக்கொடுக்க ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட்டார். நாளடைவில் ஆசிரியர் என் அன்பிற் குரியவரானார். திருமணம் நடந்தது. மணப்பரிசுகள் வந்து குவிந்தன. அப்பரிசுகளில் ஒன்றுதான் இந்தக் குடும்பவிளக்கு! இது யாரோ அவருடைய நண்பர் சிதம்பரத்திலிருந்து அனுப்பினார். அவர் பெயர்கூட இராஜன் என்று எழுதியிருந்தது. அந்தப் புத்தகந்தான் எந்நேரமும் அவர் கையிலிருக்கும். கமலா! என்பார். 'குடும்ப விளக்கா' என்பேன். 'ஆம்' என்பார். இருவரும் படிப்போம். அவர் படிக்க நான் கேட்பேன். நானும் படிப்பேன். சில சமயங்களில் அவர் கேட்டுக் கேட்டுக் களிப்பெய்துவார். அது, உண்மையில் எங்கள் குடும்ப விளக்காகவே விளங்கியது. ஆனால் நீடிக்கவில்லை; அணைந்து விட்டது. இப்பொழுது வெறும் விளக்கு நான்! எண்ணெய் இல்லை' என்று கூறிமுடிக்க முடியவில்லை அவளால், தொண்டை காய்ந்து விட்டது.