பக்கம் எண் :

எக்கோவின் காதல்193

பிள்ளை. உன்னைச் செல்வமாக வளர்த்து வருகிறேன். உன் மனம் இப்படிக் கலங்குவதைக் காண என் மனம் சகிக்குமா? உண்மையைச் சொல்லப்பா! என்னிடம் ஒளிக்க லாமா?" என்று கெஞ்சிக் குழைந்து தாயன்போடு பரிந்து கேட்டாள். அவனால் இனி விடை சொல் லாமல் இருக்க முடியவில்லை.

"வேறொன்றுமில்லையம்மா. கல்லூரியில் எனக்கும் என் நண்பர்களுக்கும் கொஞ்சம் மனத்தாங்கல் அவ்வளவுதான்".

"மனத்தாங்கலா? ஏன்? நண்பர்களோடு சச்சரவாயிருந்தால் இதற்காக இவ்வளவு கவலைப்படுவதா? பைத்தியக் காரப் பிள்ளை யாயிருக்கிறாயே? வா! எழுந்திரு! சாப்பிடலாம்!"

"இல்லையம்மா, அவர்கள் சொன்ன சொற்கள் என் மனத்தை இவ்வளவு வாட்டுகின்றன. என்னை 'அவமானச் சின்னம்' என்று சொன்னார்கள். ஏன் அப்படிச் சொன்னார்கள் என்பதும் தெரிய வில்லை. அதனால் எனக்குச் சொல்ல முடியாத துயரமாக இருக்கிறது. சொன்னவர்கள் வேறு யாருமில்லை. என்னுடன் உண்மையாக - உள்ளத்தை விட்டுப் பழகும் தோழர்கள்தாம் அவ்வாறு சொன்னது" என்று சொல்லிக் கொண்டேயிருந்த கண்ணப்பன், தாயின் கண்கள் நீரைச் சிந்திக் கொண்டிருப்பதைக் கண்டு விட்டான்.

அம்மா! என்ன இது! ஏன் அழுகின்றீர்கள்? என்று ஆச்சரியத் துடன் கேட்டான்.

"ஆம். நீ அவமானச் சின்னந்தான். ஒரு விதவையின் பிள்ளை. சாதி கெட்டவள் பிள்ளை. அப்படிப்பட்ட உன்னை அவமானச் சின்னம் என்று தானே சொல்லும் இந்த உலகம். அதற்காக ஏன் கவலைப்படுகிறாய்? கவலைப்பட்டால் அந்தப் பழி மறைந்து விடுமா? எல்லாம் நம் தலைவிதி!"

"தலை விதியாவது மண்ணாங்கட்டியாவது! என்னம்மா! விதவையின் பிள்ளையா நான்? அப்பா மலை போலிருக் கிறாரே? சாதிகெட்டவள் பிள்ளையா நான்? எனக்கு ஒன்றுமே புரிய வில்லையே! என்னம்மா இது? விவரமாகச் சொல்லுங் களேன்"

"பதறாதே கண்ணா! நான் இராகவாச்சாரி மகள். நீ இராமு ஆச்சாரியார் மகன். இதனால்தான் உன்னை அவமானச் சின்னம் என்று சொல்லியிருப்பார்கள். சாதியைச் சதமென எண்ணும் இவ்வுலகம் வேறு எந்தப் பெயரால் உன்னை அழைக்கும்?"