பக்கம் எண் :

194கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

"அம்மா! இதிலென்ன சாதி வேற்றுமையிருக்கிறது? இரண்டும் ஆச்சாரியார் சாதி என்றுதானே சொல்லுகிறீர்கள்?"

"ஆம்; சொல்லளவில் ஒன்று தான். நான் அய்யங்கார் வீட்டுப் பெண். உன் அப்பா பொன் வேலை செய்யும் ஆச்சாரியார்".

"என்னம்மா? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே! எல்லாம் புதிராகவே இருக்கிறதே. அய்யங்கார், ஆச்சாரியார், விதவையின் பிள்ளை இவை என் மூளையைச் சிதறடிக்கச் செய்கின்றனவே. எல்லாவற்றையும் தயவுசெய்து தெளிவாகச் சொல்லுங்களேன்!"

"கண்ணா! கேள் என் கதையை. என் வாழ்க்கை ஒரு கதைதான். படிக்கிறோம் சில கதைகளை. என் வாழ்க்கையில் அச்சம்பவங்கள் உண்மையாகவே நிகழ்ந்து விட்டன. என் அப்பா இராகவாச்சாரி பெரிய மிராசுதார். வேதபுரம், பிராமணர்கள் நிறைய வாழும் ஊர். அவர் சொல்லை அந்த ஊரில் யாரும் தட்டி நடக்கமாட்டார்கள். சிறிது முன் கோபக்காரர். என்னை அருமையாக வளர்த்து வந்தார். என் தாயில்லாத காரணத்தால் எனக்குத் தக்க வயது வந்ததும் திருமணப் பேச்சு நடந்தது. பணத்தாசையால் எங்காவது படுகுழியில் தள்ளி விடுவாரோ என்ற பயம் என்னைத் துன்புறுத்தி வந்தது. நல்ல வேளையாக அவராசையும் என் ஆசையும் ஒரு சேர நிறைவேறியது. நான் புகுந்த இடம் பெரும் பணக்கார வீடு. அவரும் என் மனத்திற் கேற்ற அழகும் குணமும் உடையவர். ஆகவே எனக்கும் அப்பா வுக்கும் திருப்தி.

"ஓராண்டு சென்றது. சென்னைக்கு ஒரு வேலையாக வந்தார். உன் அப்பா இல்லை இல்லை - என் கணவர் விழுப்புரத்திற்கு அருகே ஏற்பட்ட 'இரயில்' விபத்தில் இறந்து விட்டார் அவர். என் கழுத்திலிருந்த கயிறு அறுக்கப்பட்டது. ஆயினும் கூந்தல், வண்ணச் சேலை இரவிக்கை, நகைகள் களையப்படவில்லை. அவைகளால் மட்டும் நான் மகிழ முடியுமா? வாழ்க்கைதான் இன்பமாகச் செல்லுமா? வீட்டு மூலை என் இருப்பிடம். நான் வெளியே வர அருகதை அற்றவள்; மற்றவர்கள் முகத்தில் விழிக்க மறுக்கப் பட்டவள் - விதவை என்ற ஒரு காரணத்திற்காக. கழுத்திலிருந்த ஒரு கயிறு நீக்கப்பட்டதால் நான் பெண்கள் இனத்திலிருந்தே - ஏன் - மனித இனத்திலிருந்தே நீக்கப்பட்டவள் ஆனேன். என் உள்ளக் கொதிப்பு சில சமயங்களில் நீரைக் கக்கும் கண்கள் வழியாக.