பக்கம் எண் :

214கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

சொன்னீர்களே! இதுதான் உங்கள் காதலா? என் காதல் வெறும் மணிபர்சு அல்ல, என்றும் புதுமெருகோடிருக்கும் - கிழிந்து விடாது, என்றீர்களே! இதோ அதற்குள் கிழிந்து விட்டதே! கிழிந்தது மட்டுமல்ல - மீண்டும் தைக்க முடியாதபடி சுக்கு நூறாகிவிட்டதே! இதுதானா காதல்? உங்களைச் சொல்லிப் பயன் என்ன? என் அறியாமை! பெரியோர்கள் பார்த்துச் செய்திருந்தால் இப்படி யாகுமா? என் இளமைப் பருவத் துடிப்பினால் உங்கள் சொற்களை யெல்லாம் உண்மை என்று நம்பி ஏதோ காதல் என்ற பெயரால் நானும் கட்டுப் பட்டுவிட்டேன். நீங்களும் பருவக்கோளாறு களுக்கு ஆளானீர்கள்! கலியாணத்துக்கு முன்னால் ஏற்படும் காதலுக் கெல்லாம் இந்தக் கதிதான்! இதை எத்தனை சினிமாவில் பார்த்தேன். பார்த்தும் அது படம் என்று உதாசீனம் செய்து விட்டேன். முதலில் கலியாணம், பின் காமம், அதற்குப் பிறகு தான் காதல் என்பதை இப்பொழுது தான் அறிகிறேன். இப்படித் தோன்றும் காதல்தான் நிலைபெற முடியும் என்பதையும் தெரிந்து கொண்டேன். நாம் இருவருமே, இளமைப் பருவத்தில் தவழ்ந்து கொண்டிருக் கிறோம். எதையும் ஆராயாமல் காதல் என்றபெயரை வைத்துக் கொண்டு விளையாடி விட்டோம்" என்ற சொற்களையும் கண்ணீரை யும் உதிர்த்துக் கொட்டினாள். உணர்ச்சி வசத்தில் அகப்பட்டிருந்த காரணத்தால் அவளை யறியாமல் அவள் உள்ளத்திலிருந்து ஏதே தோ கருத்துகளை அள்ளி வீசினாள்.

அப்பொழுதும் அவன் பேசவில்லை. அவனால் என்ன பேச முடியும்?

"சரி; உங்கள் விருப்பம் போல் நடந்து கொள்ளுங்கள். இனிமேல் நான் என் மாமா முகத்தில் விழிக்க முடியாது. எனக்கு ஆறு, கிணறுதான் சதம்" என்று சொல்லிக்கொண்டே படுக்கையில் விழுந்து விம்மி விம்மி அழுதாள்.

அரங்கசாமி அப்பொழுதும் அசையாது நின்று கொண் டிருந்தான். வண்டி வரும் சத்தம் கேட்டது. அரங்கசாமி போய் விட்டான். பொன்னம்மாளும் முகத்தைத் துடைத்துக் கொண்டு பின்புறம் சென்று விட்டாள். கறுப்பணன் வந்ததும் "பொன்னம்மா!" என்று கூப்பிட்டான். அவளும் பயந்து கொண்டே வந்தாள். "ஏம்மா, ஒரு மாதிரியாயிருக்கிறே!" என்று கேட்டான். "ஒன்று மில்லை மாமா! வாந்தி எடுத்து விட்டேன். அதுதான் ஒரு மாதிரி யாய் இருக்கிறேன். வேறொன்றுமில்லை" என்றாள்.