பக்கம் எண் :

எக்கோவின் காதல்215

அரங்கசாமிக்கு அன்று இரவு முழுதுமே உறக்கம் வரவில்லை. அவனும் உண்மையிலேயே வருத்தப்பட்டான். வேறு வழியோ தோன்றவுமில்லை. கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தான். சரி, விடியட்டும் பார்த்துக் கொள்வோம். திருமணம் அடுத்த ஆண்டில் வைத்துக் கொள்ளும்படி உறுதியாகச் சொல்லி விடுவோம் என்று திட்டமிட்டான். பொழுது புலர்ந்தது. கறுப்பணன் பதறிக் கொண்டே ஓடி வந்தான்.

"என்ன கறுப்பணா! இப்படி ஓடி வருகிறாய்?" என்று அரங்கசாமியின் தந்தை கேட்டார்.

"ராத்திரி சும்மா படுத்திருந்துச்சுங்க; காலையிலே எந்திருச்சுப் பார்த்தேன்; படுக்கையிலே நகை மட்டுங் கெடக்கு; பொன்னம் மாளைக் காணலிங்க! என்ன செய்யட்டுங்க. ஒண்ணுந் தெரியல் லையே!" என்று பதறப் பதறக் கூறினான் கறுப்பணன்.

"ஐயோ! காணவில்லையா" என்று பதைத்து எழுந்தான் அரங்கசாமி.

சுரீர் என்று 'சிகரெட்' சுட்டுவிட்டது அரங்கசாமியின் கையில். அப்பொழுதுதான் எங்கிருக்கிறோம் என்ற நினைவு அவனுக்கு வந்தது. அடிப்பட்டுக் கிடக்கும் பொன்னம் மாளையும் சூழ்ந்து நிற்கும் கூட்டத்தையும் பார்த்தான்.

"ஐயோ! பொன்னம்மா உன் கதி இப்படியா ஆக வேண்டும். உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியது நான்தானே! இந்தப் பழியை எப்படித் தொலைப்பேன்; உன் நினைவு என் குடும்பத்தில் என்றும் நின்று நிலைபெற ஒரே ஒரு வழி இருக்கிறது. என் தேவகிக்குப் பிறக்கும் குழந்தைக்கு உன் பெயரை வைப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் நான்? உன் குழந்தையை இல்லை - இல்லை நம் குழந்தையை நானே வளர்க்கிறேன். நீ என்ன எண்ணிக் கொண்டு இறந்தாயோ" என்று மனத்திற்குள் சொல்லிக் கொண்டிருந்தான்.

திருச்சிராப்பள்ளி வண்டி வேகமாக உள் நுழைந்தது. அந்த வண்டியை நோக்கி விரைந்தான்.

'ஆபீசு'ப் பையன் 'சார், சார் ' என்று ஓடி வந்தான். அரங்கசாமி திரும்பிப் பார்த்தான். தன் 'ஆபீசு'ப் பையன்தான் என்பதையறிந்து பதறிப்போய் 'என்னப்பா?' என்றான்!