பக்கம் எண் :

எப்படி வளரும் தமிழ்23

காட்டும் நெறியில் கருத்தைச் செலுத்தினால் செப்புமொழி பதினெட் டாகவும் சிந்தனை ஒன்றாகவும் இருப்பதுதான் ஒற்றுமை என்பது நன்கு புலனாகும். இவ்வாறின்றிச் செப்புமொழி ஒன்றாகவும் சிந்தனை பதினெட்டாகவும் இருப்பின் ஒருமை யாகும். இதனால் நாட்டுக்கு வலிமையோ, வளர்ச்சியோ, பொலிவோ, பெருமையோ ஏற்படும் என்பது ஐயப்பாட்டுக் குரியது.

உண்மையான நாட்டுப் பற்றும் விடுதலை வேட்கையும் கொண்ட பாரதியார் இவ்விரு சொற்களுக்கும் உள்ள வேறு பாட்டை நன்குணர்ந்தவராதலால் நாடு வாழ்தல் வேண்டும் என்ற மனநிலையிற் பாடுகின்றார். இந்திய ஒற்றுமையைப் பல்வகை யிலும் வலியுறுத்திப் பாடும் இயல்புடைய அவர்,

"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - நம்மில்
       ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு"

என்று பாடுகின்றார். இப்பாடலில் மிகுந்த உன்னிப்புடன் ஒற்றுமை என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார்; ஒருமை எனுஞ் சொல்லைப் பயன்படுத்தவில்லை. இந்தியா நல்வாழ்வு பெற ஒற்றுமை வேண்டற் பாலது. அவ் வொற்றுமையைச் சிந்தனை ஒன்றாக இருந்தால் மட்டுமே உண்டாக்க இயலும். அதை விடுத்து மொழி ஒன்றாக இருப்பதாலோ ஆட்சி ஒன்றாக இருப்பதாலோ உண்டாக்கிவிட இயலாது என்பது அவர்தம் கருத்து.

ஆதலின், இவ்விரு சொற்களுக்கும் உள்ள வேறுபாட்டை நன்குணர்ந்து கொண்டு இந்தியா வலிமையுள்ள நாடாக விளங்க ஒருமை வேண்டுமா? ஒற்றுமை வேண்டுமா? என்பதை அரசியல் சீர்வாய்ந்த நல்லோர் ஆய்தல் நன்று.

இந்தியா பல்வேறு மொழிகள், பல்வேறு இனங்கள் பல்வேறு பண்பாடுகள், நாகரிகங்கள் கொண்ட பல்வேறு மாநிலங்களடங்கிய நாடு. அம் மாநிலங்களில் உள்ள இனம், மொழி, பண்பாடுகள் தத்தம் தனித்தன்மையை இழந்து ஒரே இனம், ஒரே மொழி, ஒரே பண்பாடு என இரண்டறக் கலந்து விடுவதுதான் நோக்கமெனில் ஒருமைப்பாடு என்ற சொல்லே பொருத்தம் உடையது. அவ்வாறன்றி, அந்தந்த மாநிலத்து இனம், மொழி, பண்பாடு கெடாமல், தனித்தன்மையை இழந்து விடாமல் காத்துக்கொண்டு இந்திய ஒன்றியத்திற் கூடி வாழ்வது நோக்க மெனில் ஒற்றுமை என்ற சொல்லே சாலப் பொருத்தமுடைத்து.