4 கவிதை பிறந்த கதை குழந்தை எளிதாகப் பிறப்பதும் உண்டு, பெரும் வேதனை களுக்கிடையே பிறப்பதும் உண்டு. அவ்வவர் உடல்நிலைக் கேற்ப அது நிகழும். கவிதை பிறப்பதும் அப்படித்தான். எளிதாகவும் பிறக்கும், இடர்ப்பாடுகள் தந்தும் பிறக்கும். அவ்வப்பொழுது ஏற்படும் மனநிலைக்கேற்ப அது பிறக்கும். கவிதை பிறக்கும் பொழுது என் பட்டறிவு நிகழ்ச்சிகளை ஈண்டுக் குறிப்பிட விழை கின்றேன். 1949இல் பணி தேடும் படலத்தில் நான் ஈடுபட்டிருந்த நேரம், மணப்பாறையில் என் நண்பர் இல்லத்தில் தங்கியிருந்தேன். அப்பொழுது 'பொன்னி' ஆசிரியரிடமிருந்து ஒரு மடல் வந்தது. கோவையில் முத்தமிழ் மாநாடு நடைபெறப் போவ தாகவும் 'அழகின் சிரிப்பு' என்னுந் தலைப்பில் கவிதைப் போட்டி வைத்திருப்ப தாகவும் திசம்பர் மாதம் 22ஆம் தேதிக்குள் கவிதை அனுப்புதல் வேண்டு மென்றும் குறிப் பிட்டிருந்தார். மணப்பாறை நண்பர் என்னையும் போட்டியிற் கலந்துகொள்ள வற்புறுத்தினார். அப்பொழுது என் மனநிலை சரியில்லை. அதனால் எழுதவு மில்லை. தேதி 20 ஆயிற்று, பெரியகுளத்துக்குப் புறப்படுகிறேன். நான் கவிதை எழுதவில்லையே என்று நண்பர் வருத்தப்பட்டார். தொடர் வண்டியிற் செல்லும் பொழுது எழுதிவிடுகிறேன். தாளொன்று கொடு என்று சொன்னேன். 'இவ்வளவு நாள் எழுத வில்லை; இனி மேலா எழுதப் போகிறாய்' என்று மனச் சலிப்புடன் ஒரு தாளை என்னிடம் தந்தார். நான் வாங்கி வைத்துக்கொண்டு அதைப்பற்றிய சிந்தனையே இன்றித் திண்டுக்கல் வந்து சேர்ந்தேன். இரவு 11 மணி பெரியகுளத்துக்குச் செல்ல வேண்டிய கடைசி வண்டி போய் விட்டது. காலை 4 மணிக்குத்தான் வண்டி. பேருந்து நிலையத்தி லேயே விழித்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு நேரம் விழித்துக்கொண்டு வெறுமனே இருக்க முடியும்? சரி கவிதை எழுதுவோம் என்றெண்ணி எழுதி முடித்தேன். |