பக்கம் எண் :

28கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

ஞானச் சுடரொளி வீசுதடா - தெய்வம்
        நண்ணிவந் தென்னெஞ்சிற் பேசுதடா"

என்பது அப் பாடலாகும். பின்னர், முன்னும் பின்னும் சில கண்ணிகளைச் சேர்த்துப் பாடிப் 'பேசுந் தெய்வம்' என்ற தலைப் பிட்டு வெளியிட்டேன். இப்பாடல் 'சாகித்திய அகாதமியால்' இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. 'காவியப் பாவை' என்னும் நூலில் வெளிவந்துள்ளது இப் பாடல்.

பின்னர் அவன் பிள்ளைப் பருவங் கடந்து பள்ளிப் பருவம் எய்தினன். ஒருநாள் அவனை அடித்துவிட்டேன். அவன் அழுது கொண்டே உறங்கி விட்டான். அவன் அழுதது கண்டு துடித்துப் போனேன். "உன் கண்ணில் நீர் வடிந்தால், என்னெஞ்சில், உதிரங் கொட்டுதடி" என்று பாரதி பாடியது உண்மையென உணர்ந்தேன். உணர்ச்சி வயப்பட்ட நான் உறங்கும் அவனைப் பார்த்தேன். உள்ளுணர்ச்சி வெளிப்பட்டது கவிதையாக. பாடல் இதோ.

`அடஞ்செய்தாய் நீ என்றடித்தேன் - பின்னர்
        அழுகின்ற கண் கண்டு நெஞ்சந் துடித்தேன்
குடங்கையில் கன்னத்தைச் சேர்த்துத் துயில்வாய்
        குறுநெற்றி எழில்காட்டும் மேலாக வேர்த்து.'

ஏழு கண்ணிகள் கொண்ட இப்பாடல் "செற்றந் தவிர்ந்தேன்" என்னுந் தலைப்பில், 'காவியப் பாவை' என்னும் தொகுப்பில் வெளியிடப்பட்டது.

குமணன் என்ற என் மகன் ஒரு பாடல் தோன்றக் காரணமாக இருந்தான். இவன் பிள்ளைப் பருவத்தில் கொழுகொழு வென்றிருப் பான். ஒருநாள் விடியலில் என் துணைவியார் கோலப் பொடியைச் சிறிய திண்ணையில் வைத்துவிட்டு வாயிலில் நீர் தெளித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது தவழ்ந்து கொண்டே வெளியில் வந்த அச் சிறுவன் திண்ணையருகே வந்து, அந்தக் கோலப் பொடியை இழுத்துத் தலையில் கொட்டிக் கொண்டான். அஃது உடல் முழுதும் சிந்திவிட்டது.

என் துணைவியார் என்னை அழைத்துக் காட்டினார். நான் ஓடி வந்து பார்த்தேன். வெள்ளைப் பிள்ளையார் போல அமர்ந்திருந் தான். எனக்கு ஒரே சிரிப்பு. என் மனைவிக்கோ ஒரே எரிச்சல்.