உடனே ஒரு தாய் தன் பிள்ளையைப் பற்றிக் கூறுவதாக அமைந்த பாடலொன்றை எழுதினேன். எடுப்பு சொன்னாலும் புரியாத பருவம் - என்றன் துயரத்தைச் சற்றேனும் உணராத சிறுவன் - சொன்னாலும் வாயிலில் மாக்கோலம் போட்டுப் - பின்னர் வந்தங்கு நோக்குவேன் அவன் கூச்சல் கேட்டுக் கோயிலில் பிள்ளையார் போலே - அந்தக் கோலப் பொடிக்குள்ளே மூழ்கித் தவிப்பான் - சொன்னாலும் .......................................................................... பஞ்சணையில் துயில்கொள்ளும் போது - சின்ன பாலகனின் பால்வழியும் கண்ணிமையின் மீது கொஞ்சிவிளை யாடுமெழில் காண்பேன் - செய்த குறும்பெல்லாங் காணாத தாயுள்ளம் பூண்பேன் - சொன்னாலும் 'பிள்ளைக் குறும்பு' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இவ் விசைப் பாடலும் 'காவியப் பாவை'யைச் சேர்ந்தது. ஒருநாள் என் இல்லத்தில் தேர்வுத்தாள் திருத்திக் கொண் டிருந்தேன். அப்பொழுது அத்தர் விற்கும் வணிகர் ஒருவர் வந்து, வாங்கிக் கொள்ளுமாறு வற்புறுத்தினார். இப்பொழுது வேண்டாம்; பிறகு வாங்கிக் கொள்ளுகிறேன் என்று எவ்வளவோ சொல்லியும் விடவில்லை. "இது உயர்ந்த சரக்கு; இது பாரிசு; இது இங்கிலாந்து; இது பம்பாய்" என்று சொல்லிக்கொண்டே என் சட்டையில் அத்தரைத் தடவிவிட்டு, ஒரு போத்தலைத் தாளில் சுருட்டிக் கொடுத்து என் தலையிற் கட்டிவிட்டுப் போனார். தேர்வுத் தாள் திருத்தும் பொழுது, இஃது எனக்கு ஓர் இடையூறாகவும் எரிச்ச லாகவும் இருந்தது. திருத்தும் பணி ஓடவில்லை. எரிச்சல் பாடலாக ஓடி வந்தது. உடனே பாடலை எழுதி விட்டுத் திருத்தும் பணியில் ஈடுபட்டேன். |