பக்கம் எண் :

30கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

எடுப்பு

அத்தர் விற்று வருவோனின் தொல்லை - அப்பப்பா
அவன் கையில் அகப்படுவார் தப்பிடுவதில்லை.

முடிப்பு

பூசுவது நம்முடலில் ஒன்று - சின்ன
போத்தலில் அடைத்துக் கொடுப்பது மற்றொன்று
காசுவரும் படிஒன்றே நோக்கம் - குழைந்து
கனியமிகப் பேசிடுவான் கண்டபலன் ஏக்கம்.

இந்த அத்தர்ப்பாட்டும் 'காவியப் பாவை'க்குரியதே.

கனவிலே பிறந்த கவிதைகளும் உண்டு. அவற்றுள் ஒன்று காண்போம். 'அனிச்ச அடி' ஓர் அருமையான நாடகக் காப்பியம். இதன் ஆசிரியர் பாவலர்மணி பழநி, காப்பியத்தை எழுதி முடித்த பின் என்னை உள்ளிட்ட நண்பர் சிலர் முன்னிலையில் மாலை தோறும் படித்துக் காட்டுவார். நாங்கள் ஐய வினாக்கள் தொடுப் போம். அவர் தெளிவுபடுத்தி ஐயம் அகற்றுவார். சில வேளை மறுப்புகள் உரைப்போம். மறுப்புக்கேற்ற மறுமொழி உரைத்து அமைதி தருவார். மாற்ற வேண்டிய நிலைமை ஏற்படின் மாற்றமும் செய்து கொள்வார். பண்டை நாள் அரங்கேற்றம் போல் அந்நிகழ்ச்சி இருந்தது. இற்றைநாள் கவிதை என்ற பெயரால் வெளிவரும் சிறுவரி களைக் கண்டு மனம் நொந்து போயிருந்த எனக்கு இக்காப்பியப் படிப்பு, பேருவகை தந்தது. இவ்வுவகைப் பெருக்கில் ஊறித் திளைத்துக்கொண்டிருந்த நான் ஒருநாள் இரவு வழக்கம்போல் தாளும் தூவலும் தலைமாட்டில் வைத்துக் கொண்டு உறங்கினேன். பாவலர்மணி காப்பியத்தைப் படிக்கிறார். அதனைக் கேட்டுப் பெருங்களிப்புற்ற நான் அவரைப் பாராட்டிப் புகழ்ந்து பாடுகிறேன். அப் பாடல் கனவாகவே முடிந்து விடக் கூடாதே எனக் கருதி எப்படியோ முயன்று விழித்துக்கொண்டு அப்பாடலை எழுதி வைத்தேன். அக்கனவுப் பாடல்களை உங்கள் நினைவுக்குத் தருகிறேன்.

பாட்டென்ற பேரால் பழுதுபட்ட சொற்றொடரைக்
கேட்டென்றன் நெஞ்சங் கிறுகிறுத்தேன் - வேட்டெழுந்து