நாடகமாம் நன்மருந்தை நண்பன் பழநியெனும் பாடவலான் தந்தான் படைத்து. தேன்கலந்து தந்தனனோ தெள்ளமுதந் தந்தனனோ நான்கலந்தே இன்புற்றேன் நாடோறும் - வான்பறந்தேன் வாட்டுந் துயர்துறந்தேன் வையந் தனைமறந்தேன் பாட்டை அவன்படிக்கக் கேட்டு. கூற்றமிலா வாழ்வு கொடுத்த தமிழ்த்தாயே ஏற்றவரம் இம்மகற்கும் ஈந்தருள்வாய் - சாற்றுக் கனிச்சுவையை விஞ்சுங் கவிமாலை நின்றன் அனிச்சவடிக் கீந்தான் அவன். விருந்திற் பிறந்த கவிதையொன்று. ஒரு நாள் இரவு திருநெல்வேலி பொருநையாற்றங்கரையில் உள்ள குறுக்குத் துறையில் அமர்ந்து நண்பர் சிலருடன் உரையாடி மகிழ்ந்து கொண்டிருந்தேன். அன்று முழு நிலா. சலசல என்றோடும் புனற்பரப்பும் விரிந்த மணற்பரப்பும் நிலாவொளியில் பள பளக்கும் காட்சி கண்ணுக்கு விருந்தா யமைந்தது. சற்று நேரத்தில் நிலாச் சோற்று விருந்தும் படைக்கப் பட்டது. சி.சு.மணி என்ற நண்பர் இவ்விருந்துக்கு ஏற்பாடு செய் திருந்தார். அவ்விருந்தில் பாகற்காய் வறுவலும் இடம் பெற்றிருந்தது. எனக்குப் பிடிக்காத பொருள் அது. எனினும் சுவையாக இருந்தமை யால் அதனை விரும்பி உண்டு பாராட்டினேன். உடனிருந்த நண்பர் அந் நிகழ்ச்சி பற்றிப் பாடித் தருக என்றார். உடனே பாடல் பிறந்தது. பாகல் எனக்குச் சுவை தந்தது. என் பாடல் அவர்க்குச் சுவை தந்தது. அப் பாடலுள் ஒன்றை நீங்கள் சுவைத்து மகிழத் தருகின்றேன். கைக்குங்காய் தித்திப்புக் காட்டும் படிசமைத்த கைக்குந்தான் வாழ்த்துங் கடமுடையேன் - மொய்த்துவரும் நண்பர் உடையான் நயத்தக்க நாகரிகன் பண்பன் அவன்பெற்ற பாங்கு. முனைவர் தமிழண்ணல் என்னைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது 'முடியரசன் விரைவாகவும் எளிதாகவும் பாடுகிறார். காரில் செல்லுகையில் கால் நடந்து உலாவுகையிலும் 'டென்னிஸ்' பந்தாடும் போதும் பலருடன் அரட்டை அடித்திருக்கும் போதும் கூட அவரால் பாட முடிகிறது. அவர் பாடுங்கால் வேதனைப்பட்ட |