பக்கம் எண் :

எப்படி வளரும் தமிழ்33

5
இருபதாம் நூற்றாண்டில் கவிதை

எழுச்சிக் காலம்

இருபதாம் நூற்றாண்டைத் தமிழ்க் கவிதைக்கு ஒரு நற்காலம் என்றே கூறலாம். கவிதைக்கு நல்ல மதிப்பும் நயத்தக்க வரவேற்பும் இந்நூற்றாண்டில் இருப்பதைக் காண்கின்றோம். நாளிதழ், கிழமை யிதழ், திங்களிதழ், ஆண்டு மலர் முதலிய அனைத்திலும் கவிதைக்கு முதன்மை தரப்படுவதால் அக் கூற்று மெய்ப்பிக்கப் படுகிறது. மேலும் தமிழகத்தின் ஊர்தோறும் நிகழும் இலக்கிய விழாக் களிலும் வானொலியில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சி களிலும் கவியரங்கம் தனியிடம் பெறுகிறது.

கவிதையில் ஒரு தனியார்வம் பிறந்திருப்பதால் தக்காரும் எழுதுகின்றனர், மற்றோரும் முயல்கின்றனர். அதனால் இந் நூற்றாண்டில் கவிதை எழுதுவோர் தொகை பெருகுவதைக் காண்கின்றோம். அவருட் சிலர் கவிஞர்களாகவும் பலர் கவிதை எழுதுவோராகவும் புலனாகின்றனர். எவ்வாறாயினும் இந்த நூற்றாண்டைக் கவிதைக்கு எழுச்சிக் காலம் என்று துணிந்து கூறலாம்.

விடுதலைக் கவிதைகள்

இந்த நூற்றாண்டில் கவிதைகளைப் பொதுப்பட நோக்கின், அனைத்தும் விடுதலை வேட்கை அமைந்து கிடப்பதைக் காணலாம். அயலவர் ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்த நாடு விடுதலை பெற பிறமொழிச் சூழ்நிலையில் சிக்கித் தவித்த தாய்மொழி தன்னுரிமை பெற, ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகள் என்ற மனப்பான்மை ஒழிந்து, அவர்களும் சரிநிகர் சமமாய் வாழ, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் சமப்படுத்தப்பட்டு மேல்கீழ் என்ற பேதைமை துடைக்கப்பட்டு ஒன்றே குலம் என்ற ஒருமைப் பண்பு வளர்ந்து சமுதாயம் விடுதலை பெற்றொளிர, வழிவகை கூறுவனவாக, உணர்ச்சியும் எழுச்சியும் கலந்த ஆர்வத்தால் உந்தப்பட்டு வெளி வந்தனவாக, இக்கவிதைகள் காட்சியளிக் கின்றன. பாரதியார்