பெற்றது கவி உள்ளம். ஆகவே, காணும்பொருள் அழகியதாயினும் அழகற்றதாயினும், இன்பமாயினும், துன்ப மாயினும் அதனுடன் ஒன்றி, ஈடுபட்டுத் தன்னை மறந்து பாடு கின்றான் கவிஞன். இவ்வுயர்நிலையை - கவிப் பண்பை, நன வழியத் தோன்றும் கனவு நிலையை நம் சங்க இலக்கியங்களில் தொட்ட இடமெல்லாம் காணலாம். அவ்விலக்கியங்களில் ஓரிரு காட்சிகளைக் காண்போம். ஒல்லையூர் முல்லை ஒல்லையூர் என்னும் சிற்றூரில் வாழ்ந்த சாத்தன் ஒரு பெருவீரன்; ஈத்துவக்கும் பண்பும் உடையவன். அவனுடைய உயர்குணங் களைக் கேட்டறிந்த குணவாயிற் கீரத்தனார் என்ற புலவர் அவனை நாடி அவ்வூருக்கு வருகிறார். வந்தவிடத்து அவன் இறந்துபட்டான் என்ற செய்தி எட்டுகிறது அவருக்கு, உள்ளம் துணுக்குற்றார். பரிசில் பெற்றிலேமே என்ற வருத்தம் அவருக் கில்லை; வீரனும் வள்ளலும் ஆகிய ஒரு பெருமகன் இறந்தானே! இனி, பாணர் பாடினியர்க்குப் புகல் யார்? என்ற பெருநோக்கு அவர் நெஞ்சில் அவலத்தைத் தேக்கியது. செயலற்ற நிலையோடு திரும்புகின்றார். ஒல்லையூர்ப் பகுதியிலே முல்லைக்கொடிகள் பூத்துக் கிடக் கின்றன. புலவர் பார்வையில் அம் மலர்க் கொடிகள் தென் படுகின்றன. அக்கொடிகளோடு பேசத் தொடங்கிவிடுகிறார். அவலம் அவரைப் பேசச் செய்கிறது. "முல்லையே! ஒல்லை யூரிலே நீ பூக்கின்றாயா? சாத்தன் மாய்ந்த பிறகும் பூக்கின்றாயா? ஏன் பூக்கின்றாய்? நீ பூக்கும் மலரை யார் சூடிக் கொள்ளப் போகிறார்கள்? இளைய வீரர் சூடாரே! வளையணிந்த மகளிரும் பறிக்க மாட்டாரே! பாணனும் தன் யாழின் கோட்டால் வளைத்துப் பறித்துச் சூடானே! பாடினியாவது அணிந்து கொள்வாளா? அங்கு அவளும் அணி யாளே! அனைவருமே அவன் பிரிவால் கலங்கிப் போயிருக்கின்றார் களே! ஒருவருக்கும் பயன்படவில்லை என்றால் வீணாக நீ ஏன் பூக்கின்றாய்? அவனையிழந்து நான்தான் கொடியேனாய் வாழ் கின்றேன்; நீயும் கொடியைதானோ? அவன் பிரிவு உனக்குத் துயர் தரவில்லையா? தந்திருப்பின் உனக்கேன் மலர்ச்சி? வீரன் மாய்ந்தான் - வள்ளல் மாய்ந்தான்; நீ பூக்கலாமா?" என்று தம்மை மறந்து பேசுகின்றார் புலவர். முல்லை தன்னியல்பால் பூக்கிறது. இவர் அவலத்தால் செயலற்ற நிலை அடைகிறார். அவலத்தோடு இணைந்துவிடு கிறார். அதனால் |