பக்கம் எண் :

46கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

தம்மை மறந்து விடுகின்றார். முல்லை நம்முடன் பேசுமா? நாம் சொல்வதைக் கேட்குமா? சாத்தன் மறைவை உணருமா? என்றெல் லாம் பகுத்துப் பார்க்கும் அறிவு அங்கே ஒடுங்குகிறது. ஒடுங்கவே சாத்தன் மறைவை உணர முடியாத, சொல்லும் சொற்களைக் கேட்க முடியாத முல்லையிடம் சென்று இவ்வாறெல்லாம் புலம்புகின்றார். அப் புலம்பலைக் கேளுங்கள்:

"இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
      நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி அணியாள்
      ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
      முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே" (புறம். 242)

இப் பாடலைப் படிக்கும்போதே அவலம் அரும்பும்; வாய்விட்டுப் படித்தால் உள்ளம் உருகும்; இன்னும் இசை யுடன் பாடத் தெரிந்து பாடிவிட்டால் நம்மையும் அறியாமல் உடல் நடுங்கும்; உள்ளம் துளங்கும்; கண்கள் கலங்கும். கையறு நிலை பாடிய புலவர் நம்மையும் கையறு நிலைக்குக் கொண்டு வந்து விடுகிறார்.

மயக்குறு மக்கள்

பாண்டியன் அறிவுடைநம்பி, அரசன் மட்டுமல்லன், ஒரு பெரும் புலவனாகவும் விளங்கினான். குழந்தைகளைப் பற்றி அவன் பாடிய பாடலொன்று புறநானூற்றில் வருகிறது. அங்கே அவன் குழந்தையாகவே மாறிவிடுகிறான். அப் பாடலைப் படிக்கும்போது பாண்டியன் அறிவுடை நம்பி என்ற பெருமகன் நம் கண்முன்வரவே மாட்டான்; சிறு சிறு பச்சிளங் குழந்தை களே வரக் காண்போம். அந்தப் பிள்ளைக் கனியமுதங்களிடையே இருந்து உணவு உண்ணும் காட்சியும் நமக்குத் தோன்றும். பாடலைப் பார்ப்போம்.

"...................................................
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை............" ( புறம். 188)