பக்கம் எண் :

64கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

சேர்த்திருக்க லாமே? என்று ஒருபடி மேலேறுவாள்; அவளைத் தனியாகவா புனலாட விட்டீர்கள்? என ஏங்குவாள். இத்தனைக்கும் விடை பகர்ந்தாக வேண்டும்; வினாக்கள் எழு முன்பே அனைத்தும் விளங்கக் கூறித் தாயின் வாயை அடைத்துவிடுதல் வேண்டும்.

அந்தப் புனல் பொதுவான புனலன்று; கண்டாரால் விரும்பப் படும் புனல். அதனால் நாங்களும் விரும்பினோம். புனலாடினோம் என்ற குறிப்பைக் 'காமர் புனல்' என்று சுட்டுகிறாள். அப் புனல் விரைவாகச் செல்கிறது, அதனால் அவளை இழுத்துவிட்டது. விரைந்து ஓடும் அப் புனலில் பெண்களாகிய எங்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை - என்ற கருத்தைக் 'கடும்புனல்' என்று குறிக்கின்றாள். அவளைத் தனியே நாங்கள் விடுவோமா? நாங்களும் உடன் சென்றோம் என்பதைக் 'கலந்தெம்மோடு ஆடுவாள்' என்று சொல்லாமற் சொல்லி விடுகின்றாள். இவ்வளவும் கேட்ட தாய் வாயைத் திறப்பாளோ? தோழி சொன்னபடியே தாய் ஆடினாள். இப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கின்றன "காமர் கடும் புனல் கலந்தெம்மோடாடுவாள்" என்ற வரியில் அமைந்த சொற்கள். 'ஆடுவாள்' என்ற சொல், நீரில் ஆட்டம் போட்டாள். அதனால் வெள்ளம் இழுத்துச் சென்றது என்ற குறிப்பையும் உணர்த்தி நிற்கிறது.

இரட்டுற மொழிதல்

இனி இரட்டுற மொழியும் அழகையும் சிறிது காண்போம்:

"வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன?
     இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை? - மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்
     ஏரகத்துச் செட்டியா ரே"

இது தனிப்பாடல். புலவர் நம்மைப் பலசரக்குக் கடைக்கே இழுத்துச் சென்றுவிடுகின்றார். வெங்காயம், சுக்கு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் - இத்தனை சரக்குகளையும் இந்தப் பாடலிலே - புலவர் படைத்த கடையிலே காண்கிறோம். இந்தக் கடைச் சரக்குச் சொற்களெல்லாம் மேலெழுந்த வாரியாக இன்பந் தந்து, தம்முள் பதுக்கி வைத்திருக்கும் வேறு பொருள்களையும் வெளிப்படுத்தி நின்று அழகு செய்கின்றன. திருவேரகத்தில் எழுந்தருளியிருக்கும் செட்டியாரே! விரும்பத்தக்க இந்தக் காயம் (உடம்பு) சுக்குப்