74 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12 |
வருங்கால உணர்வு இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் பாடுவதோடமை யாது எதிர்காலத்தையும் உணர்ந்து பாடுவதுதான் உண்மைக் கவிஞன் இயல்பாகும். நம் பாவேந்தரும் வருங்காலத் தேவைகளை உணர்ந்து பல மேலான கருத்துகளைப் பாடியுள்ளார். போரால் விளையுந் தீமைகளைக் கண்டறிந்து, மனித இனத்தைக் கவ்விக் கொண்டுள்ள அச்சவுணர்வை அகற்றி, அவர்களை அமைதியாக வாழவிடுதல் வேண்டும் என்ற நல்லுணர்வுடன் இந்தியா, உருசியா போன்ற நாடுகள் அரிதின் முயன்று வருகின்றன. இந் நன்முயற்சி உலகில் அரும்புவதன் முன்னரே நம் பாவேந்தர், "புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்" என்று உறுதியுடன் முடிவு கட்டுகிறார். குடும்பக் கட்டுப்பாட்டியக்கம் இன்று இந்தியாவிலும் உலகிற் பிற பகுதிகளிலும் பரப்பப்பட்டு வருகிறது. இவ்வெண்ணம் கருக் கொள்ளு முன்பே நம் பாவேந்தர் 'காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்துதற்குக் கதவொன்று காண்போம்' என முன் கூட்டியே திட்டம் தந்துள்ளார். பட்டென்று பேசும் இயல்பு பாவேந்தர்பால் அழுத்தமான பற்றும், தன்மான இயக்கத்தில் ஈடுபாடும் தமிழ் காக்கப் போராடுந் திறனுங் கொண்ட பேராசிரியர் ஒருவர், சிறுகவிதை நூலொன்று அச்சிட்டுக் கரந்தைக்கு வருகை தந்த பாவேந்தரிடம் மதிப்புரை பெற நண்பர் ஒருவரை உய்த்திருந் தார். பாவேந்தர் படித்தார், குற்றுகரப் புணர்ச்சி பிரிக்கப்பட்டு, அக்குற்றுகரமும் ஓர் அசையாக அலகிடப்பட்டு, அச்சேறி யிருந்தது. அது கவிஞரின் கண்ணையும் கருத்தையும் உறுத்தியது. அவ்வுறுத்தல் "எவன்டா இதை எழுதியது?" என்று அதட்டலாக வெளி வந்தது. பேராசிரியர் பெயரை வந்தவர் சொன்னார், 'எவன் எழுதினால் என்ன இவன் எழுதிய அழகுக்கு மதிப்புரை வேறு வேண்டுமோ? என்ற சொற்கள், வந்தவர் செவியில் விழுமுன், அந் நூல் அவருடைய முகத்தில் விழுந்தது. பேராசிரியர், இவரிடம் அழுத்தமான பற்றுடை யவர், தன்மான இயக்கத்தவர், தமிழ்ப் போர் மறவர் என்பது |