கவிஞருக்குத் தெரியும். எனினும் 'பட்'டென்று இப்படிச் சொல்லி விட்டார். "பற்று பரிவு, ஒட்டு உறவு எதைப் பற்றியுங் கவலைப்பட மாட்டார். உள்ளத்திற் பட்டதைப் பட்டென்று சொல்வார்" என்பதற்குச் சரியான சான்றல்லவா? குழந்தையுள்ளம் பார்வைக்கு முரடராகத் தோற்றந் தரும் கவிஞர், குழந்தை யிலும் சின்னஞ் சிறு குழந்தையாக மாறிவிடுவார். பல சமயங்களில், பல இடங்களில் அந்தக் குழந்தையுள்ளத்தைக் கண்டு நான் மகிழ்ந்து வியந்திருக்கிறேன். ஒரு சமயம் காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் நிகழ்ந்த கவியரங்குக்குத் தலைமை ஏற்கப் பாவேந்தர் வந்திருந்தார். மாலை நிகழ்ச்சிக்குக் காலையி லேயே வந்துவிட்ட கவிஞர், ஓர் அறையில் படுத்திருந்தார். தமது இடக்கையை மடக்கித் தலைக்கு அணையாக வைத்துக் கொண்டு படுத்திருந்தார். காணச் சென்ற நாங்கள், வணக்கம், வணக்கம் என்று சொல்லிக்கொண்டே ஒவ்வொருவராகப் புகுந்தோம். 'ம்ம், ம்ம்' என்று சொல்லிக் கொண்டே படுத்திருந்த அவர், பலரும் வருவதறிந்து எழுந்து அமர்ந்தார். என்னை நோக்கி, "பாருப்பா, கூப்பிட்டுக் கிட்டு வர்ராங்க, அப்படியே விட்டுட்டுப் போயிடுராங்க, தலைக்கு ஏதாச்சும் வேணுமான்னு கூடக் கேக்கலே, கை வலியெடுத்துப் போச்சு' என்று அவர்க்கே உரிய பாங்கில் சொன்னார். அவர்க் கருகில் மேசை மேல் ஒரு தோற்பெட்டியும், அதன் மேல் சமுக்காளம் சுற்றிய தலையணையும் இருப்பதைக் கண்டு, "ஐயா! இதை வைத்துக் கொள்ளலாமே" என்றேன். "அடே! ஆமாப்பா நான் எடுத்திட்டு வந்ததுதான்" என்று சிரித்துக்கொண்டார். தாமே கொணர்ந்த தலையணை யையும் மறந்துவிட்டுக் கையை மடக்கிப் படுத்துக் கொண்டு, கை வலிக்கிறதே என்று கூறும் உள்ளத்தை என்ன உள்ளம் என்று இயம்புவது? குழந்தையிலும் சின்னஞ்சிறு குழந்தையுள்ளம் என்றுதானே நினைக்கத் தோன்றுகிறது. கணக்கும் நினைப்பும் மற்றொரு சமயம் திருச்சி வானொலி நிலையத்தார் கவியரங்க நிகழ்ச்சிக்குப் பாவேந்தரை அழைத்திருந்தனர். 'இருநூறு ரூபா தந்தால் வருவேன்' என மறுமொழி எழுதிவிட்டார் கவிஞர். கவியரங்க |