92 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12 |
பண்டைய முடியாட்சியை இன்றைய முற்போக்காளர் சிலர், கொடிய ஆட்சியெனக் குறைகூறுதலும் உண்டு. குடி யாட்சியில் மக்களைப் பற்றிய கவலையில்லாது கோலோச்சு வோர் பலராயினர் என்பதை நடுவுநிலையாளர் நன்குணர்வர். பண்டைய மன்னன் நன்னன் என்பான் ஒருவன் மட்டுமே பழிக்கப்படுகின்றானே தவிர, மற்றையோர் மக்கள் நலத்திற் கண்ணுங் கருத்துமாக இருந்தனர் என்பதை நம் பண்டைய இலக்கியங்கள் பறை சாற்றுகின்றன. ஒன்றிரண்டு கூறுகின்றேன். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன், இளம் பருவத்திலே அரசுக் கட்டிலேறினான். அப்பொழுது பகையரசர் இவன் மேல் படையெடுத்தனர். அதனை யறிந்த பாண்டியன் சீறியெழுந்து, வஞ்சினம்(சபதம்) கூறுகிறான். "என்னை இளையன் எனக் கருதிப் படையெடுத்த பகைவரைத் தோற்றோடச் செய்யே னாகின், "என்நிழல் வாழ்நர் செல்நிழல் காணாது, கொடியன் எம்இறை யெனக் கண்ணீர் பரப்பிக் குடிபழி தூற்றுங் கோலேன் ஆகுக" (புறம் - 72) என்று குறித்துள்ளான் என்றால் குடிமக்கள் நலங்காக்கும் கொள் கையில் பண்டை மன்னர் கொண்டிருந்த அக்கறை நினைந்து நினைந்து பாராட்டத் தக்கதன்றோ? கோவலன் கள்வனென்று கருதிக் கொலைத் தண்டனை விதித்தது தவறென வுணர்ந்த பாண்டியன் உடனே உயிர் நீத்த செய்தியைச் சாத்தனார் உரைக்கக் கேட்க செங்குட்டுவன் வருந்தி, "மழைவளம் கரப்பின் வான்பே ரச்சம் பிழைஉயிர் எய்தின் பெரும்பே ரச்சம் குடிபுர வுண்டும் கொடுங்கோ லஞ்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்ப மல்லது தொழுதக வில்" எனக் கூறுகிறான். மன்னர் குடிப்பிறத்தல் தொழத்தக்கதன்று; துன்பம் நிறைந்தது; அஞ்சி யஞ்சி வாழுந் தன்மையது என்று அரச வாழ்வை வெறுத்துப் பேசுகின்றான். மன்பதை காக்கும் பொறுப் புணர்ச்சியில் அன்றைய முடியாட்சி அக்கறை காட்டியது என்பதை |