பக்கம் எண் :

எப்படி வளரும் தமிழ்93

மேற்கூறியவற்றால் நாம் நன்கு உணர்கிறோம். குடியாட்சியில் கோலோச்சுவோர் மக்கள் நலனில் எவ்வளவு அக்கறை காட்டு கிறார்கள் என்பதையும் நாம் உணர்கிறோம். முடியாட்சியாயினும் குடியாட்சியாயினும் கோலேந்திகளின் மனப் பக்குவத்தைப் பொறுத்துதான் ஆட்சி மதிக்கப்படுகிறது. மக்கள் நலனில் அக்கறை கொண்டோர் சிலரே. தம் நலனில் அக்கறை கொண்டோர் பலர்.

இனி, மன்பதை அஃதாவது சமுதாயம் எவ்வாறிருந்தது என்பதைக் காண்போம். கோப்பெருஞ் சோழன் வடக்கிருக்கும் செய்தியறிந்து, அவனைக் காணப் பிசிராந்தையார் என்ற புலவர் பெருந்தகை செல்கின்றார். அவரைக் கண்ட சான்றோர் அவரை நோக்கி, யாண்டு பலவாகியும் உமக்கு நரையில்லையே! உமக்கு இஃது எவ்வாறு வாய்த்தது? என வினவினர். அவர் அந்நிலை பெற்றமைக்குப் பல காரணங்கள் கூறுகிறார்.

"ஆன்றவிந் தடங்கிய கொள்கைச்
     சான்றோர் பலர்யான் வாழும் ஊரே" (புறம்-191)

என்று இறுதியாகக் கூறுகிறார். சான்றோர் பலர் வாழும் ஊர் என்னுடைய ஊர். அதனால் அவருடன் பழகி மகிழ்ச்சியாக இருக்கிறேன். அம்மகிழ்ச்சிப் பெருக்கால் நரையின்றி இளமை யுடன் இருக்கிறேன் என்கிறார். இதனால், பண்டை நாளில், எல்லாரும் இன்புற்றிருக்க நினைவதுவே அல்லாமல் வேறொன்ற றியாச் சான்றாண்மை மிக்க சமுதாயமாக விளங்கியதை அறிந்து கொள்கிறோம்.

பிசிராந்தையார் கூறுங் காரணங்களுள் மற்றொன்றும் குறிப் பிடத்தகுந்தது. "வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும்" என்பது அது. வேந்தன் அல்லவை செய்யமாட்டானாம். நல்லவை செய்து காப்பானாம். இதனால் பண்டைய அரசியல் நாகரிகத் தையும் அறிய முடிகிறது.

பண்டைய நாளில் நம் சமுதாயம் நாகரிகத்தின் உச்சியில் மின்னிப் பொலிந்ததை "உண்டாலம்ம இவ்வுலகம்' என்று, கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி பாடிய புறநானூற்றுப் பாட லொன்று அழகுற எடுத்துக்காட்டுகிறது. அப் பாடற் கருத்தைக் கொண்டு பண்டைய மன்பதை நாகரிகம் எத்தகையது என்று தெரிந்து கொள்ளலாம்.