பக்கம் எண் :

94கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

"சாவா மருந்தெனப்படும் அமிழ்தமே கிட்டினும் தனித் திருந்து உண்ணார்; யாரோடும் வெறுப்பில்லாதவர், பிறர் அஞ்சு வதற்கு அஞ்சிச் சோம்பியிரார்; புகழுக்காகத் தம்முயிரையும் ஈவர்; பழியெனின் உலகம் முழுவதும் பெறினும் கொள்ளார்; மனக் கவலை யில்லாதவர்; தமக்கென முயலார்; பிறர்க்கென முயலுவர்; இத் தன்மையர் உண்மையால் இவ்வுலகம் இருக்கிறது" என்று கூறுவ தால் அம் மன்பதையின் பேருள்ளம் கண்டு வியக்கின்றோம்.

இனி, பண்டை நாளிற் குடும்ப வாழ்க்கை எவ்வாறிருந்தது என்பதைக் கூறுகிறேன். திருமணமான ஆடவன், தான் உழைத்து அறஞ்செய்து, தானும் உண்பானே அன்றிச் சோம்பி இரான். ஏதேனும் ஒரு தொழில் செய்து இல்லறம் செவ்வனே நடைபெற முயலுவன். தொழிலை உயிராகக் கருதி ஓம்புவன். மனைவி, கணவனே உயிரெனக் கொண்டு, மனைத்தக்க மாண்புடையளாகி, இல்வாழ்க்கை நடத்துவள், இக் கருத்தைக் குறுந்தொகையில் பாலை பாடிய பெருங்கடுங்கோ,

"வினையே ஆடவர்க் குயிரே, வாணுதல்
     மனையுறை மகளிர்க்கு ஆடவர்உயிர்" (குறுந். 135)

என்ற பாடலால் விளக்கிக் காட்டுகிறார்.

கூடலூர்கிழார் என்ற புலவர் மற்றொரு குடும்பத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறார். செல்வ மகளொருத்திக்குத் திருமணம் ஆயிற்று. அவள் கணவனுடைய இல்லம் சென்றாள். அவ்வூர்க்குச் செவிலித்தாய் சென்று, அத் தலைவி குடும்பம் நடத்தும் பாங்கை நேரிற் கண்டு வந்து, அதனை நற்றாய்க்குக் கூறுவதாகப் புலவர் பாடுகிறார். முற்றிய தயிரைப் பிசைந்து கொண்டிருக்கிறாள் அச் செல்வமகள். அப்பொழுது அவள் உடுத்திருந்த தூய ஆடை நழுவுகிறது. தயிர் படிந்த விரல்களைக் கழுவாது, அவ்வாடையைச் சரி செய்துகொண்டு, தன் கண்களில் தாளிதப் புகை பொருந்தத் தானே செய்த இனிய புளிப்பாகரைக் கணவனுக்குப் பரிமாறு கிறாள். கணவன் அதனை இனிது, இனிது என்று கூறிக்கொண்டு உண்ணு கிறான். தலைவி தன் முகத்தில் நுண்ணிய மகிழ்ச்சியைக் காட்டு கிறாள். இப் பாடலால் தலைவி தானே சமைப்பதையும் அவள் உழைப்பைக் கணவன் பாராட்டுவதையும், அதனால் அவள் புன்மூரல் செய்வதையும் அக் குடும்பம் அன்பு மயமானது என்பதை யும் அறிந்து கொள்கிறோம்