பக்கம் எண் :

10கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13

இச்சமயத்தில் இவர் இளைஞராயிருந்தமையால் மலேயா முதலிய ஊர்களில் நடந்து வந்த வணிகத்திற் கூட்டு வைத்திருந்த வர்கள் இவரிடம் ஒரு தொகையைக் கொடுத்துப் பங்கைப் பிரித்துக் கொண்டனர்.

சண்முகத்துக்குப் பதினெட்டு வயதாயிற்று. தக்க பருவம் அடைந்து விட்டார். வெளிநாட்டில் நடத்தி வந்த வணிகத்தில் தமக்குச் சேரவேண்டிய பங்குத் தொகை சரியாக வந்து சேர வில்லை; நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை அறிந்து கொண்டார். தமது பதினெட்டாம் வயதில் வழக்குத் தொடர்ந்தார். அன்று தொடங்கிய வழக்கு, அவர்தம் இறுதிக் காலம் வரை தீராமல் தொடர்ந்து கொண்டேயிருந்தது. இந்தியாவில் தேவகோட்டை சென்னை, தில்லி முதலிய ஊர்களிலும், மலேயாவில் மலாக்காவிலும் சிங்கப்பூரிலும் வழக்குகள் நடைபெற்றுப் பின்னர் இலண்டன் “பிரிவிக் கவுன்சில்” வரை நீடித்து நடந்தன.

ஆறிடங்களில் நடந்த வழக்குகளில் நான்கில் வெற்றித் தீர்ப்பு, ஒரே ஒருமுறை எதிர்த்தரப்புக்கு வெற்றி கிட்டியது. இறுதியாக வழக்கு முடியுமுன் சண்முகனார் இயற்கையெய்தி விட்டார். அவர் வாழ்நாளிற் பெரும் பகுதியை இவ்வழக்கு எடுத்துக் கொண்டு விட்டது. செட்டிநாட்டில் இவ்வழக்குப் பரவலாக (பிரசித்தமாக)ப் பேசப்பட்டது. ஏறக்குறைய நாற்பது நாற்பத்தைந்தாண்டுகள் இவ்வழக்கு நீடித்தது.

வழக்கிலும் பொதுத் தொண்டிலும் முழுமையாக ஈடுபட்டமை யால், தம் தொழிலைக் கவனிக்க இயலாது போயிற்று. இவ்வழக்கின் பொருட்டுச் செலவிட்ட தொகை பல இலக்கமிருக்கும். இதனாற் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்பட்டு வறுமைக்கு ஆளானார்.

இல்லறப்பயன்

சண்முகனார், இலக்குமி இருவரும் ஒரு மனம் உடையவராகி இல்லறம் நடத்தி வந்தனர். தற்காத்தலும் தற்கொண்டானைப் பேணலும் தகை சான்ற சொற்காத்தலும் சோர்வின்மையும் ஆகிய பெண்டிர்க்குரிய இலக்கணங்கள் நிரம்பப் பெற்று, நற்குண நற்செய்கைகள் உடையவராய் இலக்குமி ஆச்சி அவர்கள் திகழ்ந் தமையால், ‘இல்லதென் இல்லவள் மாண்பானால்?’ என ஊரார் போற்றும் வண்ணம் அவர்கள் இல்லறப் பாங்கு விளங்கியது.