சண்முனாரும் பெண்ணுரிமை பேணி, வாழ்க்கைத் துணைவி யார்க்குச் சம வாய்ப்பளித்து, இல்வாழ்க்கைப் பண்பும் பயனும் ஆகிய அன்பும் அறனும் உடையராகி வாழ்ந்து வந்தார். கோவலனும் கண்ணகியும் போல் வாழ் கின்றனர் என ஊரார் கூடிப் பேசும் அளவிற்கு அவர்கள் வாழ்க்கை சிறந்து விளங்கியது. இல்வாழ்க்கையின் பயனாக நன்கலமாகிய நன்மக்கட் பேறு பல பெறினும் அவை குறைப்பேறாக அமைந்து விட்டன. இறுதியில் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் எஞ்சினர். மக்களைச் சீருஞ்சிறப்புமாக வளர்த்து வந்தனர். இளமைப் பருவத்திலேயே இயற்கையாகவே முற்போக்கான எண்ண முடைய ராதலின் பிள்ளைகளின் பெயரிலேயே ஒரு புரட்சி செய்தார். பிள்ளைகளின் பெயர்களுக்கு முன்னர், தந்தையின் பெயரை இடுவதுதானே வழக்கம். அம்முறைப்படி ஆண் மகனுக்கு, ச.சோலை எனப் பெயர் வைத்தார். பெண் மகளாகிய பார்வதிக்கு, ச. பார்வதி எனப் பெயர் சூட்டவில்லை. ஆண்மகனுக்குத் தந்தை பெயரின் முதலெழுத்தை இடுவது போலப் பெண் மகளுக்குத் தாயின் பெயரில் வரும் முதலெழுத்தைத் தான் இடுதல் வேண்டுமென்று ‘லெட்சுமி’ என்ற தாயின் பெயரி லுள்ள முதலெழுத்தைக் கொண்டு லெ. பார்வதி என்றே எழுதி வைத்தார். ஆவணச்சான்றுகளில் அவ்வாறே பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்ணுக்கும் உரிமை வேண்டும். மதிப்பு வேண்டும் என்ற புரட்சி மனப்பான்மை அப்பொழுதே அவரிடம் குடி கொண்டிருந் தமை இதனாற் புலனாகிறதன்றோ? எதிர்ச்சிந்தனை எது செயினும் அச்செயலில் ஒரு புதுமை காணப்பெறும். ஏதேனும் ஒன்று செய்ய நினைத்தால் நன்கு எண்ணித் துணிவது தான் அவர்தம் இயல்பு. அவ்வகையில் தாமே எண்ணி ஒரு முடிவுக்கு வருவார். பின்னர் மக்களை அழைத்து, ‘இது செய்ய எண்ணு கிறேன்; இவ்வாறு செய்ய எண்ணுகிறேன். உங்கள் கருத்தென்ன?’ என வினவுவார். மூத்தவராய சோலை, தமது எண்ணங்களைச் சொல்வதும் உண்டு. இளையவராகிய பார்வதி, தந்தையார் செய்வதில் தவறா இருக்க முடியும் என்று கருதி, ‘நீங்கள் சொல்வது சரிதான்’ என்று சொல்லி விடுவார். |