தமிழ் நெடுங்கணக்கை மணலிலேதான் முறை வைத்து எழுதிப் பழகுதல் வேண்டும். பின்னர் பனை யோலையில் எழுத்தாணியால் எழுதப் பழகுதல் வேண்டும். எழுத்துகள் முத்து முத்தாக இருக்கும். எண்சுவடி முதலானவற்றை மனப்பாடம் செய்தல் வேண்டும். மனப்பாடம் செய்யும் பழக்கத்தால் அக்கால மாணவர்கள் நல்ல நினைவாற்றல் பெற்று விளங்கினர். இத்திண்ணைப் பள்ளியிற் சேர்க்கப்பட்ட நம் சண்முகம் எழுது வதிலும் மனப்பாடம் செய்வதிலும் சிறந்து விளங்கினார். ஆசிரியரால் பாராட்டப் பெறும் நன்மாணாக்கராகத் திகழ்ந்தார். குல வழக்கம் அக்காலச் செட்டி மக்களிடம் ஒரு வழக்கம் இருந்து வந்தது. ‘படிப்பதற்கென்று ஒரு சாதியிருக்கிறது. நம்குலத் தொழிலாகிய வட்டித் தொழில் செய்வது தான் நம் குல வழக்கம்’ என்று கருதித் திண்ணைப் பள்ளிக் கூடப் படிப் போடு நிறுத்திவிடுவர். சிறு பருவத்திலேயே இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா போன்ற கடல் கடந்த நாடுகளிலுள்ள வட்டிக் கடைகளுக்கு அனுப்பி வைப்பர். அக்குல வழக்கத்தின்படி நம் சண்முகத்தையும் திண்ணைப் பள்ளிப் படிப்போடு நிறுத்தி விட்டனர். திண்ணைப் பள்ளியளவில் சண்முகம் நிறுத்தப் பட்டாலும் சண்முகம் செட்டியார் என்றான பின்னர் ஆங்கிலத்தில் நன்கு பேசுமளவிற்கு ஆற்றல் பெற்றார். தமிழ் இலக்கியங்களிலும் ஈடுபாடு கொண்டு விளங்கினார். தன் முயற்சியாலும், சிங்கப்பூர் மலேசியா பகுதிகளில் வாழ்ந்து வந்தமையாலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் திறமை பெற்று விளங்கினார். திருமணமும் குடும்பப் பொறுப்பும் செட்டிநாட்டு வழக்கப்படி சண்முகத்துக்குப் பத்தாம் வயதி லேயே இலக்குமி (லெட்சுமி) என்னும் குலமகளாரைத் திருமணம் செய்து வைத்தனர். இவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கும்போது, சண்முகம் 17 அல்லது 18 வயதுற்ற நிலையில், இவர் தம் தந்தையார் வயி. சுப்பிரமணியன் செட்டியார் திடீரென இயற்கையெய்தி விட்டார். அதனால் குடும்பப் பொறுப்பு சண்முகனார் கைக்கு வந்தது. ஆயினும் பொறுப்பேற்கத்தக்க பருவம் எய்திலர். |