பக்கம் எண் :

8கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13

இந்தியாவில் மாநிலங்கள் பலவிருப்பினும், தமிழ் மாநிலம் ஒன்றுதான் ‘தமிழ்நாடு’ எனச் சிறப்புப் பெயர் பெற்றுத் திகழ்கிறது.

அது போலவே தமிழ் நாட்டிற் பல்வேறினத்தார் மிக்கு வாழும் மாவட்டங்கள் பலவிருப்பினும், நகரத்தார் மிக்கு வாழும் பகுதி மட்டுமே ‘செட்டிநாடு’ எனச் சிறப்பித்துப் பேசப்படுகிறது.

பல்வேறு சிறப்புகளுடன் ‘நாடு’ என்றழைக்கப்படும் சிறப்புங் கொண்டு மிளிர்கிறது இப்பகுதி.

இத்தகு சிறப்பு வாய்ந்த செட்டிநாட்டில் கானாடு காத்தான் என்ற பெயர் கொண்ட சிற்றூர் ஒன்றுள்ளது.

புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடிக்கு வருவோர், கானாடு காத்தான் என்ற இவ்வூரைக் கடந்துதான் வருதல் வேண்டும்.

இது சிற்றூராகினும், இந்தியா முழுமையும் தம் பெயர் விளங்கச் செய்த, வெள்ளையரசிடம் செல்வாக்குப் பெற்றிருந்த செட்டி நாட்டரசர் அண்ணாமலையாரை ஈன்றெடுத்த பேரூரும் ஆகும்.

அவ்வூரில் வயி. சுப்பிரமணியன் செட்டியார் என்ற பெருமகனார் வாழ்ந்து வந்தார். அவருக்குப் பர்மாவிலும் மலேசியாவிலும் கடைகள் இருந்தன. செல்வச் செழிப்பு மிக்கவர். அவர், தம் இல்லக்கிழத்தியாகிய அழகம்மையாச்சி யுடன் ஊரார் போற்றும் வண்ணம் இல்லறம் நடத்தி வந்தார்.

இருவரும் அறவோர்ப் பேணல், விருந்தெதிர் கோடல் முதலிய இல்லறப் பாங்குகள் பொருந்தப் பத்தி நெறியறிந்து, அதனைக் கடைப்பிடித்து ஒழுகி வரும் நாளில் முதலில் ஒரு பெண் மகவை ஈன்றெடுத்தனர்.

அடுத்து ஓர் ஆண்மகவைப் பெற்றெடுக்கும் பேறு பெற்றனர். பின்னர் பெண்மக்கள் இருவரைப் பெற்றெடுத்தனர்.

இரண்டாவதாகப் பிறந்த அந்த ஆண் மகவுக்குச் சண்முகம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். மக்களைச் செல்வச் செழிப்புடன் வளர்த்து வந்தனர்.

அக்கால வழக்கப்படி திண்ணைப் பள்ளிக்கூடத்திற் சண்முகம் சேர்க்கப்பட்டார். தமிழ், நெடுங்கணக்கு, பிறைவாய் சுவடி, எண்சுவடி, ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, நன்னெறி முதலியன கற்றுத் தேர்ந்தார்.