1 குடிப்பிறப்பு செட்டிநாடு கலைக்கோவில் பல எழுப்பிக் கல்வியறிவு செழித்தோங்கச் செய்துவரும் நாடு. கடவுட் கோவில்களும் கணக்கின்றிக் கட்டுவித்துப் பக்தியுணர்வைப் பரப்பிவரும் நாடு. இலக்கியங்களிற் பேசப்படும் பண்டைத் தமிழ் நாகரிகம் பட்டுப்போகாது, இன்றும் தளிர் விட்டு, அரும்பு விட்டு மணம் பரப்பிக் கொண்டிருக்கும் மாண்புடைய நாடு. அயல் நாகரிகங்களையும் ஆவலோடு தமதாக்கிக் கொண்டு, அப்படியே ஆரத் தழுவி அகங்குளிரும் நாடு. பதிப்பகங்கள் பல நிறுவிப் பயனும் நயனும் தரத்தக்க பண்பட்ட நூல்களை வெளியிட்டு, நாடுயரத் தொண்டு செய்யும் நாகரிகப் புதுமை சேரும் நாடு. தொடங்குவது எதுவாகினும் பஞ்சாங்கத்தின் துணை யோடு நாள் பார்த்துக் கோள் பார்த்து நாடித் தொழில் செய்யும் பழைமை கூறும் நாடு. அண்டை மாநிலத்தார் அயர்ந்து, வியந்து பாராட்டும் அளவிற்கு விருந்தோம்பல் பண்பிலே வீறுகொண்டு நிற்கும் நாடு. அறப்பணிகளா? பிற பொதுப்பணிகளா? எதுவாகினும் அளந்து பார்க்காது, அள்ளியள்ளி வழங்கி, ஆராப்புகழ் கொண்ட நாடு. கணக்கும் வழக்கும், இரு கண்களாகக் கருதிக் கடைப்பிடித் தொழுகும் நாடு. ஆம்; அதன் பெயர்தான் செட்டிநாடு. நகரத்தார் (செட்டி யார்) மிகுதியாக வாழ்வதால் அப்பெயர் பெற்றுச் சிறப்புற்று விளங்குகிறது அது. |