பக்கம் எண் :

சீர்திருத்தச் செம்மல்111

உண்மைக்காகவும் அந்த உயர்ந்த உள்ளம் போராடி, இலட்சியத் திற்கு என்றும் வெற்றியைக் குவித்தது. பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டு, மோசடிக் கும்பலினால் வழக்கு விவகாரப் புதை மணலில் சிக்கி, உடல் வலிமை குன்றினாலும் மனவலிமை என்றும் ஐயா அவர்களிடம் வானளாவியே இருந்து வந்தது.

ஐயா அவர்களிடம் சுயமரியாதைக் கட்சியினர் திரு. பாரதிதாசனார் அவர்கள், தந்தை பெரியார், மணியம்மையார் அவர்கள், ராய. சொ. அவர்கள், திரு. சொ. முருகப்பா - மரகதவல்லி அம்மையார் அவர்கள், கவியரசர் முடியரசனார் அவர்கள், இன்னும் எண்ணற்ற பெரியோர்கள் தொடர்பு கொண்டிருந்ததையும், ஐயா அவர்கள் மாநாடுகளிற் பங்கெடுப் பதையும் (அடிக்கடி என் இளவயதில் பார்த்ததை) நினைவு கூர்கிறேன். இவை அனைத்தும் பின்னர்நான் பொது நிகழ்ச்சி களில் பங்கு பெறும் போது பெரிதும் உதவின.

ஐயா அவர்களின் சிந்திக்கும் திறன், செயல் வேகம் மிக உன்னத மான ஒன்று. எதையும் தொலை நோக்குக் கண்ணுடன் தான் பார்ப்பார்கள். நகரத்தார் சமூகம் திருமணத்தில் எளிமை காட்டாமல் பொருள் விரயம் செய்து நசுங்குகிறதே எனச் சமூக முன்னேற்றத்தில் அளவரிய அக்கறையுடன் கூறுவார்கள். மற்றவர்களுக்கும் என் அருமை ஐயா அவர்கட்கும் என்ன வேறுபாடு என்றால், ஐயா சொல்வதைத் தான் செய்வார்கள். செய்வதைத்தான் சொல்வார்கள். சமூக நலம் கருதி தன் ஒரே புதல்வி (என் அருமை அம்மா) திருமணத்தை 1935-ம் ஆண்டு சீர்திருத்தத் திருமணமாகச் செய்து காண்பித்தார்கள். உறவினர் எதிர்ப்பு - எவ்வளவு கடுமையாக இருந்தும் தன் இலட்சியத்தி லிருந்து விலகவில்லை. அந்த அளவு துணிச்சல், உண்மையான சமூகப் பணி எவருக்கு வரும்? இன்று வரை அது கேள்விக் குறிதான்.

நான் 1957-ம் ஆண்டு மருத்துவக் கல்லூரியில் சேர விருப்பப் பட்டேன். என் பெற்றோர் எனக்கு மிக்க ஊக்கமளித்தனர். நகரத்தார் பெண்கள் ஆண் /பெண் இருவரும் சேர்ந்து படிக்கும் கல்லூரிக்கு - குறிப்பாக மருத்துவத்துறைக்குப் போகாமலிருந்த காலக்கட்டம், அச்சமயம் என் அருமை ஐயா அவர்கள் அளித்த ஊக்கமும், துணிச்சலும் ஆக்கபூர்வமாகக் கூறிய கருத்துகளும் என் மனத்தில் பசுமரத்தாணியாகப் பதிந்தன. "நீ ஐக்கிய நாடுகள் அவையின் தலைவராக உள்ள திருமதி விஜய லெட்சுமி பண்டிட்டைப் போல் வர வேண்டும்" என்று வாழ்த்தி அனுப்பியதைக் கண்களில் நீர் மறைக்க நினைவு கூர்கிறேன்.