பக்கம் எண் :

சீர்திருத்தச் செம்மல்113

மருந்துகளில் கவனம் செலுத்த வேண்டும். நம் நாட்டில் உள்ள மூலப் பொருட்கள் மூலிகைகள் - அவற்றிலிருந்து தான் வெளி நாட்டு மருந்து வருகிறது" என்றார்கள். அவற்றை நான் மருந்தியலில் மேற்படிப்பு (எம்.டி.) மேற்கொண்ட போது மிகுந்த ஈடு பாட்டுடன் நினைத்து வியப்பதுண்டு.

ஐயா அவர்கள் செல்வத்தில் திளைத்த போது உற்றார், உறவினர், சமூகம், சுயமரியாதை இயக்கம், சுதந்திரப் போராட்டம் எனப் பல்வேறுபட்ட வகையில் அனைவர்க்கும் தம் செல்வத்தை மனமு வந்து வாரி வழங்கினார்கள். தன்னை மோசடி செய்தவர் களிடம் வழக்குப் போட்டு, கோர்ட் விவகாரங்களில் சிக்கி, தான் வசித்த இன்ப மாளிகையை இழக்கும் நிலைவந்த போது கூட எங்கள் அனைவரையும் "உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே" என உயர்கவி பாரதியின் பாடலை உரக்கப் பாடச் செய்து, அனைவர்க்கும் திடம் அளித்த நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது. எங்கள் ஐயா என்ற கண்ணோட்டத்துடன் இல்லாமல் அந்த நிலை கலங்காத உயர்ந்த உள்ளத்தை ஆராதிக்கிறேன்.

பயன் கருதாமல் இலாப நட்டக் கணக்குப் பாராமல், விளம்பர மின்றி ஐயா அவர்கள் மற்றவர்கட்குச் செய்த உதவிகள் - உடல் அளவில், பொருள் அளவில், மனத்தளவில் செய்தவை கணக்கி லடங்கா. நன்றியுடையோர் சிலர், நன்றி மறந்தோர் பலர். இன்றைய சந்தர்ப்பவாதிகளைக் காணும் போது என் மனத்தில் என் அருமை ஐயா அவர்கள் வானளாவி உள்ளார்கள்.

ஐயா அவர்களின் திறமை, துணிச்சல், உண்மைக்கும் நேர்மைக்கும் இலட்சியத்திற்கும் வாழ்ந்து காட்டிய முறை, பரிவு, பாசம் இப்படி எண்ணற்ற பரிமாணங்களில் எழுதிக் கொண்டே போகலாம். அதற்கு அளவும் இல்லை. எல்லையும் இல்லை. வை.சு. என்ற இரண்டெழுத்தின் மகிமையும் திறமையும் எழுத்தில் அடங்காதது. ஐயா அவர்கள் ஒரு சகாப்தம் என்றும் என் மனத்தில் நிறைந்துள்ள அந்த மாமேதையைச் சிரம் தாழ்த்தி, இரு கரம் குவித்து, வணங்கி, என்றும் "எங்கள் அருமை ஐயா" அவர்களின் அருள் நிலைத்திட நீடு புகழ் ஓங்கி நிற்கப் பிரார்த்திக்கிறேன்.