பக்கம் எண் :

114கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13

20
எங்கள் தந்தையார்

பார்வதி நடராசன்

(சண்முகனாரின் திருமகளார் இளமை முதல், கண்டும் கேட்டும் அறிந்தவற்றை நினைந்து நினைந்து எழுதுகின்றார்)

தந்தையாரவர்களைப் பற்றி அவர்களின் இளமைக் காலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் பற்றி அத்தை மூலமாகவும் சிறிய தாயார் மூலமாகவும் கேட்டறிந்தவைகளையும் நானே அறிந்தவைகளில் நினைவுக்கு வந்தவைகளையும் வைத்து எழுத முற்படுகின்றேன்.

தூக்க நிலையிலிருந்த செட்டிநாட்டையும் தனவணிக சமூகத்தையும் முதன் முதல் தட்டியெழுப்பி விழிக்கச் செய்தவர்களில் எங்கள் தந்தையார் ஒருவர். விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலிருந்த முற்போக்கு இளைஞர்களை ஒன்றுகூட்டித் "தனவைசிய இளைஞர் சங்கம்" உண்டாக்க மூலகாரணமாக இருந்தவர்கள். சீர்திருத்தக் கொள்கைகளைச் செயல் முறைக்குக் கொண்டு வந்த வகையில் இவர்கள் முதலாமவர்.

முற்போக்கு முயற்சி

அக்காலத்தில் தனவணிக சமூகத்தில் முதியவர், நடுத்தர வயதினர், இளைஞர் யாவரும் தலையை மழுங்க வழித்துத் தான் இருப்பர். கழுத்தில் பட்டுக் கயிற்றில் ஓர் உருத்திராட்சம் கோத்துக் கட்டி யிருப்பர். பிற்காலத்தில் தங்கச் சங்கிலியில் உருத்திராட்சம் கோத்துக் கட்டியிருப்பர். இதற்குக் 'கெவுடு' என்று பெயர் சொல்வார்கள். இந்தக் கோலமுடையவர்களை யார் கண்டாலும் 'இவர் செட்டி யார்' என்று பார்த்த விநாடியே தெரிந்து கொள்வார்கள். நெற்றி நிறையத் திருநீறும் பூசியிருப்பர்.

தந்தையாரும் தனவைசிய ஊழியர் சங்கத்தினரும் முதன் முதலில் 'கிராப்' வைத்துக் கொண்டவர்களாம். சமூகப் பெரியவர்கள், இந்த இளைஞர்களைத் திட்டோ திட்டென்று திட்டுவார்களாம், பிறகு