திரு. சுப்பிரமணிய சிவா மற்றும் சிலருடன் தந்தையாரவர்களும் வெளியேறி வந்து விட்டார்களாம். காந்தியடிகளின் அந்நிய நாட்டுத் துணி பகிஷ்காரத்தில் கலந்து கொண்டு செட்டிநாட்டு மக்களுக்குத் தேச பக்தியை ஊட்ட, காரைக்குடியில் மகார் நோன்புப் பொட்டலில் (தற்பொழுது அந்த இடத்திற்கு காந்தி சதுக்கம் என்று பெயர்) அந்நியத் துணிகளை வைத்துக் கொளுத்த ஒரு நாளை நிச்சயித்து, அன்று ஊர் முழுவதும் தண்டோரா போடச் செய்து, இவர்கள் வீட்டிலிருந்த விலை உயர்ந்த துணிமணிகளை எல்லாம் மூட்டைகளாகக் கட்டி, அந்த இடத்தில் குவித்துத் தீ வைத்துக் கொளுத்தி, ஓர் விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்தி விட்டார்கள். அதிலிருந்து வீட்டில் அனைவரும் கதர் ஆடைதான் கட்டினோம். பாவாடையும் சட்டையும் அவ்வளவு கனமாக இருக்கும். ஆனால் அதைவிடப் பல மடங்கு கனமானது தாயார் அவர்களின் சேலை. அதைத் துவைக்கும் வேலைக்காரப் பெண் தூக்கிப்பிழிய முடியாமல் சங்கடப் படுவாளாம். மகாகவி பாரதியார், தமிழ்த் தென்றல் திரு.வி.க., தமிழர் களைத் தலை நிமிர்ந்து வாழ வைத்த பெரியார் ஈ.வெ.ரா. தேசபக்தர்கள் சுரேந்திரநாத் ஆர்யா, வரதராஜுலு நாயுடு, ஏழை மக்களின் முன்னேற்றத்துக்காகத் தன்னை மெழுகுதிரி ஆக்கிக் கொண்ட திரு. ப. ஜீவானந்தம் போன்ற பல பெரு மக்கள் கானாடு காத்தானில் எங்கள் தந்தையார் இல்லத்தில் தான் வந்து தங்குவார்கள். அப் பகுதிக்குப் பிரசாரத்துக்கு வரும் தலைவர்களைக் கூட்டி வரத் தஞ்சாவூர் அல்லது திருச்சி ரயில் நிலயைத்துக்கு இவர்கள் கார் அனுப்பி வைக்கப்படும். ஏனெனில் அந்தக் காலத்தில் இப்பகுதிக்கு ரயில் கிடையாது. தந்தையாரின் சொந்தச் செலவில்தான் இவை யெல்லாம் நடைபெறும். ஜீவானந்தம் தொடர்பு இப்பகுதிக்குப் பிரசாரத்துக்கு வந்த ஜீவானந்தம் ஐயா அவர்கள் வழக்கம் போலக் கானாடு காத்தானுக்கு வந்திருந் தார்கள். அப்பொழுது எனக்குச் சுமார் 14 வயதிருக்கலாம். தந்தையாரும் அவரும் பல விஷயங்களைப் பேசிக் கொண் டிருந்தார்கள். சீவா ஐயா மிகச் சத்தமாகப் பேசினார்கள் (இதனால்இவர் தொண்டை, உடல்நிலை பாதிக்கப்படுவ தினால்) அதனால் தந்தையார் சீவா ஐயாவிடம் "ஒரு அணாக் கொடுத்து வாங்கும் பொருளை ஒரு |