பக்கம் எண் :

சீர்திருத்தச் செம்மல்135

அது முதல் அடிக்கடி காரைக்குடியிலும் கானாடு காத்தானிலும் அன்பர்கள் சொ. முரு., அ.ராம.ராம. இருவர்களுடன் சந்திப்பு ஏற்பட்டது.

நம் சமூக சீர்திருத்தத்தைப் பற்றி முதன் முதலாகக் கட்டுரை எழுதிச் சொற்பெருக்காற்றி வந்த அன்பர் காலஞ் சென்ற மு. சின்னையா செட்டியார் அவர்களைக் கண்டு பேச 12.8.1917 அன்று அன்பர்கள் சொ. முரு., அ. ராம. ராம.வுடன் மகிபாலன்பட்டி சென்று அவர்களுடன் இரண்டு நாள் தங்கி ஆலோசனை பெற்றோம்.

15.9.17 அன்று கண்டரமாணிக்கத்தில் விவேகானந்த சபை ஆண்டு விழா மகிபாலன்பட்டி மு. சின்னையா செட்டியார் தலைமையில் நடந்தது.

நம் நண்பர் சொ. முரு. அதில்தான் முதன் முதலாக நம் சமூக வளர்ச்சி பற்றிச் சொற்பெருக்காற்றினார். சொ. முரு. அவர்கள் அப்போது இயற்றிய பாடலைக் கீழே காணலாம்.

"உள்ளம்பூ ரித்தோம்
    உவகை மிகக்கொண்டோம்

வெள்ளஆ னந்தம்
    மிகப்பெற்றோம் - கள்ளமிலாக்
கண்டமா ணிக்கம்அதில்
    கண்ணியனாம் சின்னையனைக்
கண்டமா ணிக்கம்எனக் கண்டு"

தமிழ்ப் புலவர் சிதம்பர அய்யரை ஆசிரியராகக் கொண்டு நம் சங்கத்தில் தமிழ்க் கலாசாலை ஒன்று தொடங்கப் பெற்றது. பல அன்பர்கள் அதன் மூலம் மொழி வளர்ச்சி அடைந்தனர். அன்பர் ராய. சொக்கலிங்கனார் அவர்கள், கல்வி நலம் பெற்றது இக்கலா சாலையிலேயே.

இக்கலாசாலையே, நம் சங்க அங்கத்தினர் மாதக் கூட்டங்கள் நடத்தி, நாவன்மை பெறச் சொற்பொழிவாற்றிப் பழக நல்ல வாய்ப்பாக இருந்தது.

நம் சங்கம் தோன்றிய இரண்டு ஆண்டுகட்குள் உள்நாடு வெளிநாடுகளில் வாழ்ந்த தனவணிகர்கள் 150 பேருக்கு மேல் நம் சங்கத்தில் உறுப்பினராகப் பெருகிச் சங்கம் நல் வளர்ச்சி பெற்றது.