வழக்கம். அவருடன் வருவோரும் இங்கேயே தங்குவர். இவ்வாறு அடிக்கடி வந்து போனமை யால் அம்மையாருக்கும் சண்முக னார்க்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. ஒருவர் கருத்து மற்றவர்க்குப் பரிமாறப் பட்டது. இருவர் உள்ளத்திலும் விதைக்கப்பட்ட கருத்து, நீண்ட நாள் சிந்தனைக்குப் பின்னரே முளைவிடத் தொடங்கியது. கலப்பு மணத்தையும், மாதர் மறுமணத்தையும் ஆதரித்து வந்தவரல்லவா சண்முகனார். சொல்லிக் காட்டுவதைவிடச் செய்து காட்டுவதே சிறந்தது என்று எண்ணினார். சுய மரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு, பெரியாருடன் சேர்ந்து தொண்டு செய்துவரும் அம்மை யாரும், இளமையில் தனித்திருந்து தொண்டு செய்வதைவிடத் துணையுடன் இருந்து தொண்டாற்றுவதே மேல் எனக் கருதினார். இருவர் உள்ளங்களும் ஒரு வழிப்பட்டன. தந்தை பெரியாரின் ஒப்புதலும் கிடைத்தது. திருமணம் செய்து கொண்டனர். உரிமை வாழ்வு இருவர் வாழ்விலும் புதிய தென்றல் வீசத் தொடங்கியது. தாராள மனங்கொண்ட சண்முகனார்க்கேற்ற துணையாக மஞ்சுளா அம்மை யார் நடந்து கொண்டார். முற்போக்குச் சிந்தனை கொண்ட அம்மையாருக்கேற்ற துணையாகச் சண்முகனார் நடந்து கொண்டார். 'துணை' என்ற சொல்லுக்கு முழுப் பொருளாக அவ்விருவரும் வாழ்ந்து வந்தனர். பொதுப் பணி எவ்வளவு ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் அம்மையார் செய்து வந்தாரோ, அதே ஆர்வமும் ஈடுபாடும் எள்ளளவுங் குன்றாமல், சண்முகனாரைப் பேணிக் காப்பதிலுங் காட்டி வந்தார். சண்முகனாரும் 'அம்மா! வாங்க!' என்று தான் அழைப்பார். மேடையிலே பெண்ணுரிமை பேசி விட்டு, வீட்டிலே பெண்ணடி மையை வளர்த்து வரும் ஏனைய சொல் வீரர் களைப் போல் நடவாமல் வீட்டிலும் செய்து காட்டிய செயல் வீரர் நம் சண்முகனார். அவ்விருவர்தம் அன்பும், பண்பும், செயலும் நடத்தையும் இக்கால இளைஞர்க்கு, ஒரு பாடமாக வழி காட்டியாக அமைவது நலம். |