பக்கம் எண் :

16கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13

3
பொது வாழ்வு

பொதுவாக மனித வாழ்வை இரண்டு பகுதியாகப் பகுக் கலாம். ஒன்று தனக்காகவே வாழும் வாழ்க்கை. மற்றொன்று, பிறருக் காகவும் வாழும் வாழ்க்கை.

தனக்காகவே வாழ்ந்து, அதிலே இன்பங்கண்டு திளைப்பது சுருங்கியவுள்ளம் எனப்படும். இவ்வாழ்க்கை சிறப்புடைய தென்று சான்றோராற் பாராட்டப் படுவதில்லை. ஐயறிவுடைய உயிரினங் களும் இவ்வாறுதானே வாழ்கின்றன?

பிறருக்காகவும் வாழ்ந்து, அத்தொண்டிலே இன்பங் கண்டு, அகம் மகிழ்வது விரிந்தவுள்ளம் எனப்படும். இவ் வாழ்க்கைதான் சிறப்புடைத்தென்று புலமை சான்ற பெரு மக்களாற் புகழ்ந்து பேசப்படுகிறது. மனிதன் ஆறறிவு படைத்தவன் என்பது எவ்வாறு புலப்படுகிறது? பிறருக்காகவும் வாழும் வாழ்க்கையாலன்றோ?

இவ்வகையால் நோக்கும் பொழுது வயி. சு. சண்முகனாரின் வாழ்க்கை, தமக்கென வாழாது, பிறர்க்குரியாளராகவும் வாழ்ந்த வாழ்க்கையாகவே விளங்கக் காண்கிறோம்.

பேராயக்கட்சித் தொண்டு

தொடக்கத்தில் சண்முகனார், பேராயக் கட்சி (காங்கிரசுக் கட்சி)யில் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தவர். கட்சியைத் தம் வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் வாயிலாகக் கருதாது, அதற்காகக் கைப்பொருளை மிகுதியாகச் செலவு செய்தவர். எதிர்ப்புகள் வரினும் அஞ்சாது எதிர்நின்று, கொள்கையிற் பிடிப்புடையவராக நிமிர்ந்து நின்றவர்.

காந்தியடிகள் 1927 இல் தென்னாட்டுச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பொழுது, புதுக்கோட்டை வழியாகச் செட்டி நாட்டுக்கு வருகை புரிந்தார்.