பக்கம் எண் :

18கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13

கொண்டு, ஊர் தோறும் சென்று, கூட்டம் போட்டுப் பேசி வருவார்கள்.

வெளியூர்க்குச் சென்று தொண்டர்கள் திரும்பி வருவார்களா என்ற ஐயப்பாட்டுடன்தான் மனைவி மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பர். அக்காலத்தில் அவ்வளவு எதிர்ப்பு! தொண்டர்கள், அத்தகைய எதிர்ப்புகளிலேதான் உறுதிப் பாட்டுடன் நீந்தி வருவார்கள்.

சுயமரியாதை இயக்கக் கூட்டங்களுக்கு அக்காலத்தில் எப்படிப் பட்ட எதிர்ப்பிருந்தது என்பதை, அண்ணன் இராம. சுப்பையா அவர்கள், 'நானும் என் திராவிட இயக்க நினைவு களும்' என்ற நூலில் எழுதியிருப்பதை அப்படியே தருகிறோம். படித்துப் பாருங்கள்.

"அந்தக் காலத்துலே, (55 ஆண்டுகளுக்கு முன் காரைக்குடியிலே ஆதி திராவிடர் மாநாடு ஒன்று கூட்ட ஏற்பாடு செஞ்சேன். அப்போ டெல்லி சட்டசபையிலே தலைவராயிருந்த சர்.ஆர்.கே. சண்முகம் (செட்டியார்) தலைமையில் அந்த மாநாட்டை நடத்துறதாத் திட்டம் போட்டிருந் தோம். இந்த மாநாட்டுக்கு ஊரு முழுதும் எதிர்ப்பு. ஊர்ப் பெரிய மனுசனுங்க. சாதிக் காரங்க எல்லாம் ஒன்னாச் சேர்ந்துக் கிட்டு, இந்த மாநாட்டை நடத்த விடக்கூடாதுன்னு முடிவு செஞ்சாங்க. மாநாடு நடத்த எங்கயுமே எங்களுக்கு இடம் கொடுக்கலே. சினிமா தியேட்டர்லே எல்லாம் முயற்சி பண்ணினோம். ஒருத்தரும் தர முடியாதுன்னு சொல்லிட்டாங்க. கடைசியிலே, எரோப்பளேன் ஆவுடையப்பச் செட்டியாரோட அண்ணன் சொக்கலிங்கம் என்பவரு தான் (புதுச்) சந்தைப் பேட்டைக்குப் பக்கத்தில் இருக்கிற அவரோட காலியிடத்திலே கொட்டகை போட்டு மாநாடு நடத்திக்கச் சொன்னாரு. அது அந்த நேரத்திலே ரொம்பப் பெரிய உதவி.

தடபுடலா கொட்டகை போட்டோம். எதிர்ப் பாயிருந்த வங்களுக் கெல்லாம் ஒரே வயித்தெரிச்சல் மாநாட்டுக்கு இன்னும் ஒரு வாரந்தான் இருக்கு. அப்போ காரைக்குடிச் சேர்மனாயிருந்த ஏவீ.பிஎல். சிதம்பரஞ் செட்டியார், 'மாநாடா நடத்துறானுங்க மாநாடு; கொட்டகை யைத் தீ வைச்சுக் கொளுத்திட்டா என்ன செய்வானுங்க?' என்று பேசினார்."

எதிர்ப்பாளர்கள் இவ்வாறு பேச்சளவோடு நிற்கவில்லை. சுயமரியாதை மாநாட்டுக் கொட்டகைகள் பலவற்றுக்கு நெருப்பு வைத்துக் கொளுத்திய செய்திகளை நாடறியும்.